செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மோடி, அமித்ஷா பதவி விலக கார்கே வலியுறுத்தல்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 17–

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு பிறகு மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்த வழக்கின் நோக்கம், காந்தி குடும்பத்தை துன்புறுத்தவும், எதிர்க்கட்சிகளை குறிவைப்பதும்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க டெல்லி நீதிமன்றம் நேற்று மறுத்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கார்கே பேசியதாவது:–

இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். பழிவாங்கும் மனப்பான்மையுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும். இது அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது. இதுபோன்ற செயல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. அவர்கள் (பா.ஜ.க.) மக்களை இப்படித் தொந்தரவு செய்யக்கூடாது. இந்த செய்தித்தாள் 1938ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது. இப்போது பா.ஜ.க. அரசு பணமோசடி உள்ளிட்ட விஷயங்களுடன் இணைத்து அவதூறு பரப்ப முயற்சிக்கிறது. உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை.காங்கிரஸ் கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதை பா.ஜ.க. ஒரு பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார்.

கார்கேவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ”பழிவாங்கும் அரசியலை நாங்கள் அம்பலப்படுத்துவோம். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர், அவர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *