செய்திகள்

நெல் ஈரப்பதம் விவகாரம்: திருவாரூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

சென்னை, நவ.24:

சுயமரியாதையையும், உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் விவசாய அமைப்புகளும் கலந்துகொண்டன. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய புகைப்படங்களைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

“டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?

நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.உடனே “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.

நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணை நிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி காத்திருக்கிறார்?

உழைத்த உழைப்பு

வீணாகக் கூடாது

கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா?

மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது! என்று பதிவிட்டுள்ளார்.

நெல் ஈரப்பதம்: திருவாரூரில்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதேபோல நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் ரெயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *