திருநெல்வேலி, செப். 6–
திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு முன்பு நேற்றிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (வயது19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர்.அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 2023-ம் ஆண்டு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரை 2 கைகளையும் வெட்டிக்கொலை செய்யும் முயற்சியில், தற்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேசுக்கு தொடர்பு இருந்துள்ளது. அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
அதிகாலையில் 2 பேர் கைது
தனிப்படை போலீசார், சந்திப்பு த.மு. சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கும்பல் வெங்கடேசை வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. அதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 2 சிறார்களை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.
கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கொலையாளிகள் தரப்பினரும் மோட்டார் சைக்கிளில் வரவே, 2 தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கைகலப்பு வரை சென்றதாகவும், அந்த பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இசக்கிராஜா தரப்பினர் சமாதானம் அடையாமல், திட்டமிட்டு வெங்கடேசை கொலை செய்தது தெரியவந்தது.கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தலைமறைவான இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அரசு போட்டித் தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
![]()





