செய்திகள்

நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Makkal Kural Official

நெல்லை, ஜூலை 30–

நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பனியாற்றி வந்தார். இவரை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். தனது அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரமடைந்து சுர்ஜித், கவின்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் சரவணனும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து, திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ.க்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் இன்று நெல்லை மாநகர காவல்துறையினர் சுர்ஜித்தை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *