செய்திகள்

நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

Makkal Kural Official

நெல்லூர், ஜன. 22–

ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்றபோது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. பேருந்து தீப்பிடித்தை அறிந்து ஒடி வந்த உள்ளூர் மக்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தின் ஜன்னல்களை உடைத்து 36 பயணிகள் பாதுகாப்பாக தப்பிக்க உதவியதாகவும், பேருந்து கிளீனரும் உள்ளே சிக்கிய பயணிகளைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள். பலத்த காயமடைந்து 4 பேர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 8 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தீ அணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எனினும், இரு வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக நந்தியால் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *