சென்னை, அக்.28–
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தற்போது மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது மசூலிபட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 270 கி.மீ தென்கிழக்கு திசையிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 320 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு–வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா புயல் இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
110 கி.மீ. வேகத்தில் காற்று
மேலும், இந்த தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். இப்புயல் கரையைக் கடந்த பின்னர் படிப்படியாக வலுவிழந்துவிடும்.
புயல் காரணமாக ஆந்திரம் மற்றும் ஒடிசா கடற்கரைகளில் தற்போது பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழையும் தீவிரமடைந்துள்ளது.
புயல் காரணமாக மின் கம்பங்கள், மரங்கள் சாயலாம் என்றும் சில கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்கிநாடாவில்
8ம் எண் எச்சரிக்கை
பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6ம் எண் மற்றும் மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநில கடற்கரை மாவட்டங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, எலுரு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் மழை காரணமாக ஒருவருக்கும் பாதிப்பில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தீவிர பாதிப்புக்குள்ளாகும் இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பிரசவ காலம் நெருங்கும் நிலையில் இருக்கும் 787 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
11 தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், 12 மாநில பேரிடர் மீட்புப் பணியினரும் ஆந்திரத்தில் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குழுவும் படகுகள், உயிர்காக்கும் உடைகள், மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. இவர்கள் தரப்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.புயல் கரையைக் கடந்த பிறகு, மின் கம்பங்களை சரி செய்ய, விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் வாரிய தொழிலாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
3,778 ஆந்திர
கிராமங்களில் கனமழை
ஆந்திரத்தின் 338 மண்டலங்கள் மற்றும் 3,778 கிராமங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது? மோந்தா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரத்தின் 22 மாவட்டங்களில் 3,174 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்படியாக கோணசீமா மாவட்டத்தில் 650 முகாம்களும், பாபட்லாவில் 481 முகாம்களும், கிழக்கு கோதாவரியில் 376 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது
சென்னை–ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடைகளை மூட
புதுவை அரசு உத்தரவு
ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக இருக்கிறது. இதன்காரணமாக ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு 27 முதல் 29 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தற்போது ஏனாம் மண்டலத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்களை இன்று பகல் 12 மணிக்கே மூட ஏனாம் மண்டல அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தேவையான மருத்துவ வசதிகள், மருத்துவப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அன்கித் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில்
50 கி.மீ. வேக காற்று
மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மோந்தா புயல் கரையைக் கடக்கும்போது சென்னையில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.
மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். மேலும் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களுக்கு
ரெட் அலர்ட்
ஆந்திர மாநிலத்தின் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் பாதிப்பு குறித்த உதவிகளுக்கான கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சித்தூர் (08572–242777, 9491077325),நெல்லூர் (0861–2331261, 7995576699), காக்கிநாடா (0884–2356801), பாபட்லா (0863–2234014), குண்டூர் (0864–3220226), மற்றும் ஒய்எஸ்ஆர் கடப்பா (08562–246344).
அதேபோல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தெற்கு ஒடிசாவின் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேற்ற ஒடிசா அரசும் தயார் நிலையில் உள்ளது.
மல்கான்கிரி, ராயகடா, கோராபுட், கஜபதி, கஞ்சம், நபரங்பூர், காலாஹண்டி மற்றும் காந்தமாலில் 140 பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஒடிசா மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மொத்தம் 5000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30-ம் தேதி வரை ஒடிசாவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கிழக்குக்கரை ரயில்வே, நிறைய ரயில்களை ரத்து செய்துள்ளது. சிலவற்றின் சேவை மாற்றிவிடப்பட்டுள்ளது. சில ரயில்கள் முந்தைய ஸ்டேஷன்களோடு நிற்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30–ந்தேதி வரை அரசு ஊழியர்களின் விடுப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனாமில்…
ஏனாமில் வரும் 30ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அவசர கால பணிகளில் ஈடுபட போதிய எண்ணிக்கையிலான ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மழை பெய்யும் போது பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். வீட்டுக்குள் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் மளிகை மற்றும் மருந்துகள் தண்ணீர் ஆகிவற்றை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயலை கருத்தில் கொண்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும். தேவைப்பட்டால் ஜிப்மர் மையமும் தயாராக இருக்கும்.
குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களை அணுக வேண்டும். அவசர காலத்திற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 0884–2321223, 2323200 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
![]()





