கடலூர், ஜூலை 9–
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 24ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காகவும் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல ஒரு பொது நிறுவனம் நெய்வேலியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நெய்வேலியில் 24ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா 4–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை நடைபெறுவது சிறப்புமிக்கது. தமிழகத்தில் 2வது பெரிய புத்தக விழாவாக இது நடைபெறுகிறது.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுச்சார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும், நண்பர்களுக்கு பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மாணவர்களின் புத்தகம் வாசிப்புத் திறனை அதிகரத்திடவும், போட்டித் தேர்வர்களுக்கு உதவிடும் வகையிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்ட அரசு உத்திரவிட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளது.
மாவட்ட நிருவாகம் கல்வி சார்ந்து ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக கடலூர் மாவட்டம் கல்வித்தரத்தில் முன்னேறிய நிலையில் உள்ளது. மேலும், கல்வி தவிர்த்து பிற திறன்களை வளர்த்திட பல்வேறு புதிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரித்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். அதிகமான புதிய எழுத்தாளர்களை உருவாக்க நாம் துணை இருக்க வேண்டும். மேலும், புத்தகங்களையே பரிசாகவும், நினைவு பரிசாகவும் வழங்கும் பழக்கத்தினை ஏற்படுத்திடும் பொருட்டு வருங்காலம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





