அமைச்சர் நேரு ஆய்வு
நெம்மேலி, ஜூலை 25–-
நெம்மேலி அருகே பேரூரில் ரூ.6,078 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையின் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2023 அன்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலி அடுத்த பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
கடல்சார் பணிகளாக 2 ஆயிரத்து 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் கடல் படுக்கையின் அடியில் பதிக்கப்பட்டு உள்ளது. இதில் கடல்நீரை உட்கொணரும் குழாய் ஆயிரத்து 140 மீட்டர் நீளத்துக்கும், 2 கடல்நீரை உட்கொணரும் குழாய்கள் ஆயிரத்து 150 மீட்டர் நீளத்துக்கும் மற்றும் உவர்நீர் வெளியேறும் குழாய் 756 மீட்டர் நீளத்துக்கும் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. கடல் நீரை உட்கொள்ளும் தொட்டி மற்றும் நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில், பேரூர் நீரேற்று நிலையம், பேரூரிலிருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் போரூரில் நீர்த்தேக்க தொட்டி, நீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
காலகெடுவுக்குள்
முடியுங்கள்…
மேலும், மண்டலம் 13-க்கு (அடையாறு) உட்பட்ட பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் நீரேற்ற நிலையங்களில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியான குடிநீர் வினியோகம் செய்ய குடிநீர் கட்டமைப்பு விரிவுபடுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியின் அருகாமையில் உள்ள 20 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
அதன் பின்னர், அமைச்சர் நேரு, நெம்மேலியில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் வினய், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, மேற்பார்வை பொறியாளர் சாந்தி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
![]()





