செய்திகள்

நிலத்தகராறு: சேலத்தில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை

Makkal Kural Official

சேலம், நவ. 22:

சேலத்தில் நிலத்தகராறில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45) விவசாயி. கிரான் காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி ராமதாஸ்

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:–

நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு?

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், தி.மு.க. காவல்துறை அதற்கு தயாராக இல்லை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *