செய்திகள்

நிலக்கோட்டையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை ஆணவக் கொலை: மாமனார் கைது

Makkal Kural Official

நிலக்கோட்டை, அக். 13–

நிலக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி நடந்த ஆணவக் கொலையில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:–

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார். இவர் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்கள் காதல் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த காதலர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் சம்மத்துடன் காதல் தம்பதி ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு ஆர்த்தியின் குடும்பத்தினர் அவ்வப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் பேசி வந்த போதிலும் மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தலை தீபாவளியை

கொண்டாட தயாரானபோது…

இதனிடையே திருமணம் முடிந்து தலை தீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிப்பட்டிக்கு பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக ராமச்சந்திரன் வந்தபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனை எதிர்பார்க்காத ராமச்சந்திரன் பைக்கை விட்டு இறங்கி ஓட முயன்றார். இருந்தபோது துரத்திச் சென்று வெட்டியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

பின்னர் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சந்திரனை வலை வீசி தேடிய நிலையில் அவர் உறவினர் வீட்டில் இருந்தது தெரிய வரவே அங்கு சென்று கைது செய்தனர்.

பரபரப்பு

காதல் கணவர் உடலை பார்த்து ஆர்த்தி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனையே மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *