சென்னை, டிச. 23–
ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ராமானுஜனின் 138வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் – 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதுநிலை கணிதத் துறையின் “Math π Rates” கிளப், உள் தர உறுதி குழு (IQAC) இணைந்த நடத்தி இந்த நிகழ்ச்சி கல்வியிலும் அன்றாட வாழ்விலும் கணிதத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் முதன்மை நோக்கமாக இருந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய பங்குச் சந்தையின் (NSE) தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர். தீர்த்தங்கர் பட்நாயக் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, பொருளாதாரம், நிதி மேலாண்மை மற்றும் தரவுச் சார்ந்த முடிவெடுப்புகளில் கணிதத்தின் பயன்பாடுகளை விளக்கும் ஒரு அறிவுப்பூர்வமான சிறப்புரையை ஆற்றினார். அவரது உரை, மாணவர்கள் தங்களின் அளவியல் மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்தி எதிர்கால தொழில்சார் சவால்களை எதிர்கொள்ள ஊக்கமளித்தது.
விழாவின் ஒரு பகுதியாக, கணித மாதிரி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், கணிதக் கருத்துகள் மற்றும் அவற்றின் நிஜ வாழ்க்கை பயன்பாடுகளை விளக்கும் புதுமையான மாதிரிகளை மாணவிகள் காட்சிப்படுத்தி, தங்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தக் கண்காட்சி விருந்தினர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாராட்டைப் பெற்றது.
மேலும், தேசிய கணித தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதலாம் பரிசு பெற்ற மாணவிகள் மாலதி, லீலாவதி மற்றும் பிரியதர்ஷினி, இரண்டாம் பரிசு பெற்ற மாணவிகள் பிரிந்தா, கிரிஜா, மகாலட்சுமி மற்றும் ஸ்வாதி மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற மாணவிகள் சோபியா மற்றும் ஹஜீரா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் கணிதத்திற்கான ஆர்வத்தை அதிகரித்ததுடன், மாதிரி காட்சிப்படுத்தல் மூலம் புதுமையான சிந்தனையை ஊக்குவித்ததோடு, கணிதத்தின் நிஜ வாழ்க்கை பயன்பாடுகள் குறித்த நடைமுறை அறிவையும் வழங்கி, கணிதத்தை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் கற்க மாணவிகளை ஊக்கமளித்தது.
![]()





