செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்டவுன் துவங்கியது

Makkal Kural Official

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 23–

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை ‘புளூபேர்ட்’ என்னும் அமெரிக்க செயற்கைக்கோள் எல்.வி.எம்.3–எம்.6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6யை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ராக்கெட்டிற்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

அமெரிக்க செயற்கைக்கோளை, நம் நாட்டின் ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *