செய்திகள்

நாளை நாகையில் விஜய் பிரச்சாரம்: கட்டுப்பாடுகளை விதித்த போலீசார்

Makkal Kural Official

* பொதுமக்கள்–போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது

* பொதுச் சொத்துக்கு தொண்டர்களால் சேதம் ஏற்படக்கூடாது


நாகை, செப். 19–

நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை (20ந் தேதி) பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளனர்.

அடுத்தாண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனது பிரச்சாரத்தை திருச்சியில் துவக்கினார். வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அதிமாக இருந்ததால், குறித்த நேரத்தில் பிரச்சாரத்தை துவக்க முடியாமல் போக, சுமார் 5 மணி நேரம் தாமதமாக மக்கள் மத்தியில் பேசினார். தொடர்ந்து அரியலூர் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்தார். பெரம்பலூர் சென்ற விஜய், நள்ளிரவு ஆனதால் அங்கு பிரச்சாரம் செய்யாமலேயே சென்னைக்கு கிளம்பி வந்தார். பின்னர் ஒரு நாளில் பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் இரண்டாம் கட்ட பிரச்சாரம் நாகப்பட்டினத்தில் நாளை (20ந் தேதி) நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதி வழங்கக்கோரி போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

தொடர்ந்து, புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்றக் கோரிய அக்கட்சியினரின் கோரிக்கைக்கும் போலீசார் அனுமதியளித்துனர். இருப்பினும், பகல் 12.30 மணியளவில் பேசத் தொடங்கி, அரை மணிநேரத்திலேயே விஜய் முடிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

பிரச்சாரத்தின்போது பொதுச்சொத்துக்கு தொண்டர்களால் எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது என்றும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனைளை மாவட்ட போலீஸ் விதித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *