செய்திகள்

நாளை தமிழகத்தை ஆள போவது விஜய் தான்: செங்கோட்டையன் உறுதி

Makkal Kural Official

ஈரோடு, டிச. 18:

புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதியை காண்கிறேன். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் என்று செங்கோட்டையன் உறுதிபட கூறினார்.

கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 81 நாட்கள் கழித்து, தமிழ்நாட்டில் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தவெக தலைவர் விஜய். அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. பெருந்துறை – விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் கூட்டத்தில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் பரப்புரை நிகழ்ச்சிக்காக மொத்தம் 1,797 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்பாட்டு பணிகளை தவெக நிர்வாகி செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டார். அப்போது, செங்கோட்டையன் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம், தவெக கரை வேட்டியுடன் வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில் பொதுகூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது:

வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள். தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர். உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் முதலில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி விஜய் தான். பெரியார் பிறந்த மண்ணுக்கு தவெக தலைவர் விஜய் வருகைதந்துள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்று பலர் கனவு காணுவதாக அனைவரும் கூறினார்கள். ஆனால், நாளைக்கு ஆட்சிக்கு வரப் போவது புரட்சி தளபதி தான். நல்ல தலைவர் வேண்டும் என்று மக்கள் பல நாள் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. 234 தொகுதிகளிலும் விஜய் யாரை காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *