சென்னை, அக். 23–
வங்கக் கடலில் நாளை (24–ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக 25–ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என அறிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பதை இதன் நகர்வை பொருத்துதான் கணிக்கப்படும். நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக மாறி பெயரிடும் அளவிற்கு மாறும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கெனவே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது. இதனால் வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளில் நிலவியது.
வானிலை அமைப்பு மாறியதால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்.
14 மாவட்டங்களுக்கு
மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று(23–ந்தேதி) ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி தருமபுரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(24–ந்தேதி) கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் புதுவையில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு (சென்டி மீட்டரில்) பின்வருமாறு:–
அரக்கோணம் – 13 செ.மீ., கரூர் – 11 செ.மீ., மோகனூர், நாமக்கல், நீலகிரி எஸ்டேட், வெள்ளகோவில் – 9 செ.மீ. திருத்தணி, அவலூர்பேட்டை, கிளன்மோர்கன் – 8 செ.மீ. தியாகதுருகம், ராணிப்பேட்டை, விழுப்புரம் சூரப்பட்டு, கேடார், துவாகுடி, நடுவட்டம், மேட்டூர், திருவளவன்காடு, ஊத்து, பண்டலூர் – 7 செ.மீ. கலசபாக்கம், செம்மேடு, சேந்தமங்கலம், கூடலூர் பஜார், வளாத்தி, பாப்பிரெட்டிபட்டி, பெரிய அணைக்கட்டு, கொடுமுடி, தேவாலா, கும்மிடிபூண்டி, தர்மபுரி – 6 செ.மீ. பூண்டி, நாலுமுக்கு, புள்ளம்பாடி, செஞ்சி, விழுப்புரம், மதுராந்தகம், சாத்தமங்கலம், வல்லம், மொடக்குறிச்சி, வந்தவாசி, கக்காச்சி, சாந்தியூர், மூங்கில்துரைப்பட்டு, மகாபலிபுரம், திருச்சிராப்பள்ளி டவுன் – 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில்
உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும், கிருஷ்ணா நீர்வரத்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.84 அடியாகவும், கொள்ளளவு 2,815 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 2,170 கனஅடியாக இருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் 500 கனஅடி திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காலை ஏரியிலிருந்து நீர் திறப்பு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
![]()





