அன்றும் காலை எப்போதும் போல் ராகவி கோடம்பாக்கம் மின் ரயில் நிலைய வாசல் நடைபாதையில் நளினமாக தன் பலூனாய் விரிந்த ஆடையை தன் நளினமான கைகளால் அமுக்கி விட்டபடி அமர்ந்த நொடியில் நடனதாரகைகளே மெய்மறந்து ரசிக்கும் வசீகரத் துள்ளலுடன் அவள் அருகே தத்தித் தாவி வந்தது அந்த நொ‘‘ன்’’டி நாய், ஆம் சற்றே குறைபாடு என்பதால் இந்த சின்ன ‘ன ‘ !
அந்த வீதியில் தினமும் இரட்டிப்பாகிக் கொண்டு இருக்கும் வாகன நெரிசல் சூழலில் ஸ்கூட்டர்கள், தள்ளு வண்டிகள் நடைபாதையில் ஓய்வாய் நிறுத்தப்பட்டு இருக்க அந்தக் காலையிலேயே தனது ‘வவ்வாவ்’ குரல் இசைக்கு ஏற்ப நடனமாடியபடி ராகவி அருகே ‘தாய்மடியைத் தேடி வரும் கன்று போல்’ வந்து வாலை ஆட்டியபடி ‘என் பிஸ்கட்டைத் தா’ எனக் கண்களை விரித்து, நாக்கையும் நீட்டியபடி ஏக்கத்துடன் பொறுமை காத்தது,
ராகவியோ பிஸ்கட் பாக்கெட்டை அதை விட பொறுமையாய் பிரித்துக் கொண்டிருந்தாள்.
இது மணி, எங்கே அந்த சிம்பா? என ராகவியின் கண்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களின் பகுதியிலும் தேடியது. இந்த மணி எப்போதும் எப்படியோ தன் வருகையைப் பார்த்துவிடும்.
ஆனா பாவம் சிம்பா, அதன் பார்வை குறைந்து வருவதை சமீபமாக தான் ராகவியும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள்!
ஒரு வழியாக சுவர் அருகே இருந்த விளக்கு கம்பத்தைக் கடந்து, தனது ஐந்து வயதைக் கடந்த முதுமையின் குறைபாடுகளைப் பற்றி கவலைப்படாது ,அங்கே ராகவி பிரித்துக் கொண்டு இருந்த பிஸ்கட் பேக்கட்டின் சலசலப்பைக் கேட்ட திசை நோக்கி தனது ஓய்யார நடையை சற்றே வேகமாக்கி சத்தம் போடாமல் வந்தான்.
ரயில் நிலையம் அருகே ஒரு ஆட்டோவால் ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் ஊனமாகி விட்டாலும் தன் இதர உடல் ஆரோக்கியம் சூப்பராக இருப்பதால் மணியின் ‘வவ்வாவ்’ வலிமையாகவே ஒலிக்கும்,
அதில் மணிக்கு ஓர் பூரிப்பு உண்டு என்பதையும் ராகவி அறிவாள்.
விபத்துக்கு முன்பு வரை ஓர் தேயிலைக் கடையின் முன்பே நின்றவன் ‘கார்டமம் டீயின் வாசனையும் மனித நேயமும்’ கலந்த அந்த இடத்தில், அவனது வால் ‘துள்ளல் இசை’யைக் கேட்ட இளைஞர்களின் ஆட்டத்தைப் போல் ஆடியது. பிள்ளைகள் அவனை நேசித்தார்கள். பெரியவர்கள் கூட, ஒரு பிஸ்கட் கூடுதலாக தந்து விட்டே செல்வார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் போனால் ‘கொரானா நோயாளியை பார்த்து தள்ளி நிற்பதை’ போல் இருப்பதை புரிந்து கொண்ட மணி, நேரத்திற்கு மணி அடித்தாற் போல் வந்து தின் பண்டங்கள் தரும் ராகவியின் தயவால் வயிற்றுப் பசி என்ற பிரச்சனையே கிடையாது. தன் பூரிப்பை வாலாட்டி , மகிழ்ச்சியிழையோடும் செல்லக்குரைப்பால் தெரிவித்து மகிழ்வான்,
பூனைகளை துரத்தவோ, பந்து பிடிக்கவோ முடியவில்லை!
ஆனா சிம்பா எதைத் துரத்துகிறோம், ஏன் என்பதெல்லாம் பற்றி ஏதும் தெரியாமல் மங்கல் ஒளியில் ஓர் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமே என்ற ஏக்கத்துடன் இருப்பது ராகவி மட்டும் புரிந்து கொண்ட ஒன்றாகும்!
குறைபாடுகளை உலகம் புரிந்து கொள்ளாமல் இப்படி ‘குரைத்து வாழ மறந்துவிட்டதே’ என உலகம் வசைபாடும் என்பதைக் கூட கண்டும் காணாமல் இருக்கும் சிம்பாவின் பரிதாபத்தை ராகவியால் உணர முடிந்தது எப்படி?
சரி, அது எப்படி? என நீங்களும் கேட்கலாம் !
அது உண்மையில் அண்டசராசர ரகசியம்… என்றாவது எனக்கும் தெரிந்து விட்டால் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
ஆனா ரகசியத்தை சொன்னா தலைவெடித்து சிதறும் என Statutory warning, சட்டப்பூர்வ எச்சரிக்கை இருந்தால் அதற்கான சட்டபூர்வ விடையை அண்டசராசர கோர்டில் கேட்டுத் தெளிந்தப் பிறகே கூறுவேன் என்பதை மனம் கனக்க கூறிக்கொள்கிறேன்.
ரேடியோவின் இசைக்கும் சாலை ஒலிகளின் தாள கட்டுப்பாட்டிற்கும் கட்டுண்டு திறம்பட வாழ்ந்து கொண்டு இருக்கும் மணியின் குரலில் இருக்கும் வலி ஏதுமில்லா வலிமை எப்படி?
அதுவும் ஏன்? எப்படி? என கூற முடியாமல் தவிக்கிறேன்.
உம்… வேற நல்ல எழுத்தாளரின் கதைக்கு சென்று விடும் முன்பு சொல்ல நினைப்பது ‘மனதில் துணிச்சலும் வாழ்வில் இசையும்’ இருந்தால் நமக்கும் ஓர் ராகவி கிடைப்பாள்!
உணவைப் பரிமாறிய ‘அன்னபூரணி’ ராகவி தனது வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை ஒரு சிறு விளக்கு போல் இருந்த கல்லில் ஊற்றிட மணியும் சிம்பாவும் குடித்து விட்டு மிச்சம் வைத்ததைச் சாப்பிட சில காக்காக்கள் சிறகடித்து வர தயாராகின,. அவர்களுக்கும் பிஸ்கட் தீனியும் காத்து இருக்கிறது!
ராகவி ‘என் பணி முடிந்தது’ என்ற பூரிப்புடன், முகத்தில் சிறு சலனத்தை வெளிப்படுத்தியபடி எழுந்து அருகாமையில் இருந்த நடைச் சக்கரத்தை நோக்கி புதிய எழுச்சி பெற்ற துள்ளலுடன் நகர்ந்தாள்.
சற்றே தொலைவில் நிற்கும் ஒருவர் ராகவி வரும் வரை அந்த லிப்டை நிறுத்தி வைத்தபடி புன்முறுவலுடன் ‘பொறுமையாய் வா’, என சமிக்ஞை தந்தார்.
decrose1963@gmail.com
![]()





