செய்திகள்

நாமக்கல்லில் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Makkal Kural Official

நாமக்கல், செப். 27–

நாமக்கல்லில் இன்று 3–ம் கட்ட பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் துவக்கினார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் த.வெ.க. தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். கட்சி கொடிகளை அசைத்து வாழ்த்து கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தார்கள்.

தொண்டர்கள் கூட்டத்தால், அவரது பிரச்சார வாகனம் மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை. பல மணி நேரம் தாமதமாகவே வந்தார்.

“தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கினார். முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரச்சாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.

அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

தனி விமானத்தில்…

இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக விஜய் இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் 3 சொகுசு கார்கள் அவருக்காக நின்றிருந்தன. அதில் கருப்பு கலர் பார்ச்சூன் காரில் அவர் ஏறினார். அங்கிருந்து முசிறி, தொட்டியம் வழியாக சாலை மார்க்கமாக நாமக்கல் புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரச்சார வாகனம் மூலம் நாமக்கல் நகருக்கு விஜய் பயணம் செய்தார்.

அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார்.

நாமக்கல் பி.கே.புதூர் பகுதி கே.எஸ். தியேட்டர் அருகே பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இங்கு 11–12 மணிக்கு பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் விஜய் அந்த பகுதிக்கு மதியம் 2 மணி வரை வந்து சேரவில்லை. வழிநெடுக அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பால், அவரால் குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியவில்லை. பல மணி நேரமானாலும் கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் காத்திருந்த எழுச்சி வரவேற்பு அளித்தனர்.

மக்கள் வெள்ளத்தில் விஜய் வாகனம் ஊர்ந்து வருகிறது. விஜயை பார்க்க வழிநெடுக தொண்டர்கள் நிற்பதால், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதையடுத்து வாகனத்தில் இருந்தபடி முன் உள்ளவர்களை வழிவிடும்படி கேட்டுக் கொண்டார் விஜய்.

இன்று மாலை கரூரில் பிரச்சாரம் செய்கிறார். மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு இன்றிரவு 9 மணியளவில் வரும் தவெக தலைவர் விஜய், தனிவிமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *