சென்னை, அக்.4–
வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6ந் தேதிகளில் பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்–பொத்தனூர் நான்குரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் செய்து வந்தனர்.
இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரச்சாரம் செய்யவும், 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
![]()





