செய்திகள்

நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும்: பொதுக்குழுவில் அன்புமணி பேச்சு

Makkal Kural Official

சென்னை, ஆக.10-–

நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் டாக்டர் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இதில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சி.ஆர்.பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தற்போது இந்த கூட்டத்தில் உருவத்தில் டாக்டர் ராமதாஸ் இங்கே இல்லையென்றாலும், நம்முடைய உள்ளத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த மேடையில் போடப்பட்டுள்ள நாற்காலி நிரந்தரமானது. அவர் எப்போது வேண்டுமென்றாலும் இந்த நாற்காலியில் வந்து அமரலாம். நிச்சயமாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சில நேரத்தில் சாமிக்கு கொஞ்சம் கோபம் வந்துவிடும். அப்போது என்ன செய்வோம், திருவிழா எடுப்போம். காவடி எடுப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் பூசாரிதான். பூசாரிதான் இடையில் கொஞ்சம் தடையாக இருக்கிறார்.

நமக்கு அரசியல், சமூகநீதியை கற்றுக்கொடுத்தது டாக்டர் ராமதாஸ்தான்.

குள்ளநரி கூட்டமா? தீய சக்திகளா?

பதவி, பொறுப்பு எனது மனதில் இருந்தது கிடையாது. இதற்காக நான் வரவில்லை. இந்த சமுதாயத்தை வழிநடத்தி, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இன்றைக்கு டாக்டர் ராமதாசை சுற்றியிருக்கும் ஒரு சிலர் சுயநலவாதிகள். குள்ளநரி கூட்டமா? தீய சக்திகளா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

என்னை பற்றி தினமும் வெளியாகும் செய்திக்கு நானும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ராமதாசின் பெயர் கெட்டு போய்விடும். அவருக்காகவும், நம் சமுதாயத்துக்காகவும், கட்சிக்காகவும் எல்லாவற்றையும் நான் தாங்கி கொண்டிருக்கிறேன். அவ்வளவு வலியை, பாரத்தை நான் தாங்கி கொண்டு வருகிறேன். நான் தூங்கியே பல நாட்கள் ஆகிறது. 2 பேர் சேர்ந்து போட்டால்தானே அது சண்டை. பா.ம.க. பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து கோர்ட் தீர்ப்பு வந்தபோது நான் மகிழ்ச்சி அடையவில்லை. வருத்தம்தான் அடைந்தேன். யாரை எதிர்த்து இந்த தீர்ப்பு? நமக்குள்ளேயே ஒரு தீர்ப்பா?.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம், நீங்கள் ராமதாசிடம் பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். நான் ஒரு முறை, இருமுறை அல்ல, 40 முறைக்கு மேல் அவரிடம் பேசி இருக்கிறேன். நேற்று கூட (அதாவது நேற்றுமுன்தினம்) நான் பேசினேன். குடும்பத்தினர், உறவினர்கள், நலம் விரும்பிகள் என இவர்கள் எல்லோரையும் வைத்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் காலையில் ராமதாஸ் சரி என்று சொல்வார். அப்புறம் நம்முடைய பூசாரிகள் குழப்பம் செய்ததுடன் அடுத்த நாள் காலையில் நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லி விடுகிறார்.

கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் 2 பேரும் சேர்ந்து கையெழுத்து போடுவோம் என்று 10 நாட்களுக்கு முன்பு அவர் ஒத்துக்கொண்டார். ஆனால் 5 நாட்களுக்கு முன்பு நான் மட்டும்தான் கையெழுத்து போடுவேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் நிச்சயம் ஒத்துகொள்ள முடியாது. டாக்டர் ராமதாசின் மானம், மரியாதையை விட நமக்கு வேறு என்ன இருக்கிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு டெல்லியில் இருந்து தேர்தல் கமிஷன் மூலம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘மாம்பழம்’ சின்னம் நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த சின்னத்தை பயன்படுத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்னும் நிறைய இருக்கிறது. நான் வெளியே சொல்ல மாட்டேன். என்ன நடக்குமோ, அது சரியாக நடக்கும். எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருக்கிறது. நான் பிடிவாதக்காரன் கிடையாது. ஆனால் உறுதியானவன். என்னை யாராவது பேசி சமரசம் செய்தால் சமாதானமாகி விடுவேன்.

டாக்டர் ராமதாசின் கனவு, லட்சியத்தை நிறைவேற்றுவோம். சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலய மணி, வணிகர் சங்கத்தின் மாநில செயலாளர் கார்த்திக், முன்னாள் மத்திய இணை மந்திரிகள் அரங்க வேலு, என்.டி.வேலு, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், மாவட்ட தலைவர் உமாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலாம்மாள், மாவட்ட அமைப்பு செயலாளர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் வசந்தி, மாவட்ட அமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்கள் 1,800 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *