செய்திகள்

‘நான் கட்ட நினைத்த சிறிய மணல்வீட்டை பெரிய கோட்டையாக மாற்றிக் காட்டிய ரசிகர்கள்’:

Makkal Kural Official

விஜய் உணர்ச்சிகரமான பேச்சு

‘அடுத்த 30 வருடங்களுக்கு உங்களோடு நிற்க விரும்புகிறேன்.

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீடு

கோலாலம்பூர், டிச.28-

‘என் ரசிகர்கள் கடந்த 30 வருடங்களாக என்னுடன் நின்றனர். இப்போது, அடுத்த 30 வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன் என்று விஜய் நம்பிக்கையோடு பேசினார்.

‘ஒரு பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசையில் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால் என் ரசிகர்கள் அதை ஒரு பெரிய கோட்டையாக மாற்றி காட்டினார்கள்’ என்று பெருமிதத்தோடு கூறினார்.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே, விஜய் தனி விமானம் மூலமாக மலேசியா சென்றடைந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 80 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவில் அரசியல் சார்ந்த விஷயங்கள் எதுவும் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது.

விழாவில் பங்கேற்பதற்காக பகல் 1 மணி முதலே விஜய் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் இருந்து மைதானத்தின் முன்பாகக் குவியத் தொடங்கினர். மேள தாளங்களை இசைத்து, உற்சாகமாக அவர்கள் நடனம் ஆடினர்.

மாலை 6 மணிக்குதான் இசை வெளியீட்டு விழா என்பதால், அதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்பட பாடல்களை வைத்து ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாடல்களை பாடினர்.

டிவிகே, டிவிகே: ஆரவாரம்

மாலை 6.30 மணிக்கு மேல் விஜய், விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர்கள், டிவிகே, டிவிகே (தமிழக வெற்றிக்கு கழகம்) என ஆர்ப்பரித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி இங்கு ‘டிவிகே’ கோஷம் வேண்டாம் என விஜய் சைகை செய்தார்.

என் நண்பர் அஜித்

விழாவில் விஜய் பேசியதாவது:-

இதைச் சொல்வதா, வேண்டாமா… என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது இறுதிப் படத்திற்கான (‘ஜனநாயகன்’) இசை நிகழ்ச்சியை நடத்துவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். மலேசியா என்று சொன்னாலே என் நண்பர் அஜித்தின் ‘பில்லா’ படம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

நான் பல போராட்டங்களை சந்தித்து தான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். கடந்த 30 வருடங்களாக என் ரசிகர்கள் என்னுடன் நின்றனர். இப்போது, அடுத்த 30 வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன்.

எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன். வெறும் நன்றியை வாய் வார்த்தையாக சொல்பவன் அல்ல இந்த விஜய். என் நன்றிக்கடனை நிச்சயம் தீர்த்து விட்டுதான் செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்டோகாரர்: குட்டி கதை

“ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார்.

அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க.

அதுக்கு அந்த ஆட்டோக்காரர் ‘யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க’னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க.

அதுக்கு அந்த பெரியவர் ‘நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது’னு கேட்கிறாரு. ‘தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க’னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு.

அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து ‘மழையில நனையாத, குடையை வச்சுக்கோ’னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா ‘குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்’னு யோசிச்சுட்டு இருக்காரு.

அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்!” என்று ஒரு குட்டிக்கதையை சொன்னார் விஜய்.

அட்லி, லோகேஷ் கனகராஜ்

விஜய்க்கு வெற்றிப்படங்களை வழங்கிய இளம் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். அவர்களுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அர்ஜெண்டினா ஃபுட்பால்

மேட்ச் மாதிரி

இயக்குநர் நெல்சன் பேசுகையில், “ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல.

இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்…) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு!” என்றார்.

‘லியோ’ தேதி கேட்டேன்

லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘ஜனநாயகன்’ அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள்.

எனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, ‘லியோ -2’ படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் ‘ப்ளடி ஸ்வீட்’ என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார் அவர்.

விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசுகையில்,

ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான்’ என்று கூறினார்.

ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது. இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம். ஆடிப் பாடிக் கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியாக உக்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும்’ என்று படம் பற்றிய தகவலைக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *