செய்திகள்

நானோ தொழில்நுட்பம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது:

Makkal Kural Official

வி.ஐ.டி. சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு

காட்பாடி, டிச.17-–

நானோ தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா நேற்று நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்தும், 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாடு மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது. மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-–

நானோ தொழில்நுட்பம் வெறும் அறிவியல் துறை அல்ல. அது ஒரு புரட்சியாகும். இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது. நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள் வருங்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும்.

திராவிட மாடல் அரசு உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை மாற்றி அமைத்துள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-ம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை மூலம் மாத உதவி தொகையாக ரூ.65 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் வருங்கால விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

நானோ தொழில்நுட்பமானது திறன்மிகு பேட்டரிகள், நீடித்த சூரிய தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளுக்கு முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோ.விசுவநாதன்

விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசியதாவது:

நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 நாடுகளில் இருந்து 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல தலைப்புகளை உள்ளடக்கியது.

அதேபோல 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் விஐடி 7-ம் இடம் பிடித்துள்ளது. உலகளவில் 352-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த தரவரிசையில் உயர வேண்டும் என்பது இலக்காகக் கொண்டுள்ளோம்.

ஒரு நாடு முன்னேறிய நாடாக மாற வேண்டுமானால் உயர்கல்வி மூலமே முடியும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் கல்வியை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். சுகாதாரமும் கல்வியும் மத்திய, மாநில அரசுகளுக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நோபல் விஞ்ஞானி

நோபல் விஞ்ஞானியும், அமெரிக்காவின் எம்ஐடி கல்வி நிறுவனத்தின் பேராசிரியருமான மவுங்கி பவெண்டி பேசியதாவது:–

நமது மனித இனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்து வருகிறோம். நானோ அறிவியல் தொழில்நுட்பமானது அணு அளவில் பொருளைக் கையாள்வது, வடிவமைப்பது, பொறியியல் ரீதியாக உருவாக்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதாகும்.

நானோ அறிவியலில் புதிய அறிவியல் பண்புகளை கண்டுபிடிப்பது, வேறுபட்ட பயன்பாடுகளுடன் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பது இதன் நோக்கமாகும். நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் சுமார் 30 முதல் 35 ஆண்டுகளுக்கு முன்புதான் வேகமெடுத்தது.

அறிவியல் என்பது பொருளாதார வளர்ச்சி, மனிதகுலம், ஆரோக்கியம், வளங்களுக்கான எதிர்கால இயந்திரமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியை பயன்படுத்துவது முக்கியமானது. இதற்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை விஐடி பல்கலைக்கழகம் சிறப்பாகச் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் வி.ஐ.டி. துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நானோ அறிவியல் மையத்தின் இயக்குனர் நிர்மலா கிரேஸ் வரவேற்றார். முடிவில் பேராசிரியை விமலா நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *