மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
வாஷிங்டன், ஜூலை 23–
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு அவர் கூறுவது 25வது முறையாகும் என்பதால் இது வெள்ளி விழா என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியா – பாகிஸ்தான், காங்கோ – ருவாண்டா இடையே போர்களை நிறுத்தியிருக்கிறோம் என்று அதிபர் டிரம்ப் கூறினார். அவர்கள் 5 ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தினர். அவர்களை நான் அழைத்துப் பேசினேன். கேளுங்கள். உங்களுடன் இனி வர்த்தகம் இருக்காது. இவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்கு நல்லதல்ல என்றேன். அவர்கள் இருவருமே மிக சக்தி வாய்ந்த அணு ஆயுத நாடுகள். அவர்களை அப்படியே விட்டிருந்தால் அது எங்குக் கொண்டுசென்று முடிந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், நான் அதனை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதாக நேற்று பேசியது வரை கடந்த 73 நாள்களில் டிரம்ப் 25 முறை கூறிவிட்டார். நேரடியாகவே இந்தியா அதனை மறுத்தபோதும் கூட அமெரிக்க அதிபர் இந்தப் பேச்சை நிறுத்தவில்லை.
25வது முறையாக அதிபர் டிரம்ப் இது பற்றி பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. அவரது பேச்சின் மூலம், டிரம்போ வெள்ளி விழாவே கண்டுவிட்டார் ஆனால் பிரதமர் மோடி இன்னமும் மவுனம் காத்து வருகிறார் என்று கூறியிருக்கிறது.
![]()





