செய்திகள்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’: இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்து பேச விரும்பும் டிரம்புக்கு மோடி பதில்

Makkal Kural Official

புதுடெல்லி, செப். 10–

இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்பைப் பெற்றிருக்கும். அதே நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘‘வர்த்தகத் தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் ‘‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என இசைவு தெரிவித்துள்ளார்.

உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முன் வைத்து வருகிறது. டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடன் பேச ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வளமான எதிர்காலம்

இந்தியா–அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. இரு நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்திய- அமெரிக்கா கூட்டணியில் எல்லையற்ற திறனை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தரப்பும் முயன்று வருகின்றன. நானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புடன் பேச ஆவலாக இருக்கிறேன். இது இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த மற்றும் வளமான எதிர்காலத்தைத் தரும். இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *