செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 12–

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார்.இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. ஆனால், அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு வாரங்களாக பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்களை டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்தியா கூட்டணி எம்.பிக்கள் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பேனர்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மிண்டா தேவி என்ற பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்ற டி–சர்ட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த டி–சர்ட்டின் பின்புறம் ‘124 நாட் அவுட்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்ட பீகார் வாக்காளர் வரைவு பட்டியலில் தரௌண்டா சட்டசபை தொகுதியின் கீழ் இடம் பெற்றிருந்தது. உலகளவில் 115 வயது நபரே வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரைவிட 9 வயது பெரியவராக இருக்கும் மிண்டா தேவி என்பவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.இதுபோன்று, பல வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டு, வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நாடாளுமன்றத்தின் அலுவல் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மாநிலங்களவையில் விவாதம் கோரிய 21 நோட்டீசுகள் நிராகரிப்பட்டது. இதற்கு தி.மு.க எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டில் முக்கியமான வாக்காளர் பட்டியல் முறைகேடு பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் இதே பிரச்சினை எழுப்பினார். ஆனால் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. இதனைதொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல மக்களவையிலும் , பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *