புதுடெல்லி, ஆக.22-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் மக்களவையை நண்பகல் 12 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சியினரை சபாநாயகர் கடுமையாக சாடினார்.
அவர் கூறும்போது, ‘நடப்பு தொடரில் 120 மணி நேர விவாதத்துக்கு அலுவல் ஆய்வுக்கமிட்டி ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட இடையூறுகளால் வெறும் 37 மணி நேரம் மட்டுமே அவை இயங்கியது. மேலும் 419 நட்சத்திர குறியிடப்பட்ட கேள்விகள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. ஆனால் 55 கேள்விகள் மட்டுமே வாய்மொழி பதிலுக்காக எடுக்கப்பட்டன எனக் கூறினார்.
பின்னர் அவையை நாள் குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
முன்னதாக மாநிலங்களவை காலையில் கூடியபோது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பெறப்பட்ட 18 ஒத்திவைப்பு நோட்டீசுகளை நிராகரிப்பதாக அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினரின் அமளி நீடித்தது. எனினும் இந்த அமளிக்கு இடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
மக்களவையில் இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
அத்துடன் கடுமையான குற்றச்சாட்டில் சிக்கி 30 நாட்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் குறித்த மதிப்புரையை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வழங்கினார். அப்போது எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை வெறும் 41 மணி மற்றும் 15 நிமிடங்கள் மட்டுமே அவை நடந்ததாக வேதனை தெரிவித்தார். பின்னர் அவையை நாள் குறிப்பிடாமல் அவர் ஒத்திவைத்தார்.
ஒரு மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் புயலை கிளப்பின. குறிப்பாக தொடக்க நாள்களில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின.
இதைத்தொடர்ந்து இரு அவைகளிலும் தலா 2 நாட்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்தது. இதில் மக்களவையில் பிரதமர் மோடியும், மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் பதிலளித்தனர்.
பின்னர் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர் முழுவதையும் கபளீகரம் செய்தது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டு வந்ததால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.
எனினும் தொடரின் பிற்பாதியில் எதிர்க்கட்சியின் அமளிக்கு மத்தியிலும் முக்கிய அலுவல்களை அரசு முடித்தது. குறிப்பாக முக்கியமான மசோதாக்களை விவாதம் இன்றியே இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
அந்தவகையில் கடுமையான குற்றச்சாட்டில் கைதாகி 30 நாட்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா உள்பட 14 மசோதாக்கள் மக்களவை யில் அறிமுகம் செய்யப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைப்போல மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேறின.
![]()





