செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 1-ந் தேதி கூடுகிறது

Makkal Kural Official

புதுடெல்லி, நவ.9-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாகி வருகிறது.

இந்திய நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், இடையில் மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும்.

பொதுவாக கூட்டத்தொடர் குறைந்தது 25 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். கடந்த குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் வெறும் 19 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்.

‘‘நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை (நாடாளுமன்ற அலுவல்களின் தேவைகளுக்கு உட்பட்டு) கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவை ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கீகரித்துள்ளார்’’ என்றும், ‘‘நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறோம்’’ என்றும் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாக தயாராகி வருகிறது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இவ்வளவு குறுகிய காலம் கூட்டத்தொடர் நடத்தப்பட இருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுபற்றி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில், “இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் வெறும் 15 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும். இது வழக்கத்துக்கு மாறானது.

நாட்கள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி என்ன? அரசாங்கம் பரிவர்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை, மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை, விவாதங்களை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது’’ என கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் விமர்சித்து உள்ளார். அவர், ‘பிரதமரும், அவரது குழுவினரும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளுவதில் பயப்படுவதாக’ தெரிவித்து உள்ளார். “பார்லிமெண்ட் போபியா” என்ற பயமான சூழ்நிலையில் அவதிப்படுவதாக விமர்சித்து உள்ளார்.

நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடந்து வருகிறது. இதனை வாக்கு திருட்டு என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுபற்றி கூட்டத்தொடரில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுபோல வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள் குறித்தும், அறிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. அது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த முயல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேற்று முன்தினம் நடந்த வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காங்கிரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினைகளை கிளப்பினால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜனதா ஆளாத சில மாநிலங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிராக பா.ஜனதா எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது.

கடந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 21-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவாத அழைப்பு போன்ற காரணங்களால் கடும் அமளியில் தத்தளித்தாலும் மக்களவை 12 மசோதாக்களையும், மாநிலங்களவை 14 மசோதாக்களையும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *