புதுடெல்லி, ஜூலை 23–
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை, கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால், நேற்று முன்தினமும், நேற்றும் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மக்களவையில் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு மத்தியில், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார்.
பீகார் மாநில எம்பிக்கள், தங்கள் மாநிலத்துக்கான ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நீடித்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அங்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் கேள்வி நேரத்தைத் தொடங்கிய ஹரிவன்ஷ், உறுப்பினர்கள் கேள்விகளை தொடங்கலாம் என்றார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து ம.தி.மு.க. தலைவர் வைகோ கேள்வி எழுப்பி பேசியதாவது:–
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2025 ம் ஆண்டில் மட்டும் 150 க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினர் கைது மற்றும் தாக்குதலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுஆய்வு செய்து திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.
இதனால் மழைக்காலக் கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் தொடங்கியவுடன் முடங்கின.
இந்த நிலையில், பகல் 12 மணிக்கு இரு அவைகள் மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியைத் தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று காலை 2வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
இதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, தி.மு.க.வின் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதாகைகள் ஏந்தி எம்பிக்கள் முழக்கமிட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நேற்று இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
![]()




