2026 புத்தாண்டு பிறந்தது: தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
மெரீனா கடற்கரையில் ஆட்டம் பாட்டம் * கேக் வெட்டி ஆரவாரம்
சென்னை, ஜன. 1–
2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. தமிழ்நாட்டிலும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க விட்டிருந்தனர். புத்தாண்டு பிறந்தவுடன் ‘கேக்’ வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.
கடற்கரை சாலையில்
உற்சாகம்
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்’டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகாரமுள் 12 மணியை தொட்டவுடன், ‘ஹாப்பி நியூ இயர்’ என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், ‘கேக்’ வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். மெரினா கடற்கரையில் வழக்கமான ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
புத்தாண்டையொட்டி சாந்தோம், பெசன்ட் நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிரார்த்தனை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.
நட்சத்திர ஓட்டல்களில்
குத்தாட்டம்
சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள், சொகுசு விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவுகள் முன்பே தொடங்கி இருந்தன. கட்டணம் செலுத்தி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். டி.ஜே. இசை விருந்தில் திளைத்தனர். திரைப்பட பாடல்கள் வரிசையாக ஒலிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் குத்தாட்டம் போட்டனர். ஆண்களுக்கு சவால் விடும் வகையில் பெண்கள் துள்ளி குதித்து ஆடினார்கள்.
சில நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மதுபோதையில் திளைத்தபடியும், தள்ளாடியபடியும் சிலர் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கத்தை விட மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. சில ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கடை ஊழியர்கள் திணறினார்கள்.
சென்னையில் பலத்த
போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ‘டிரோன்’ கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், வீலிங் சாகசம் செய்பவர்கள், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் நேற்றிரவு 10 மணி முதல் மூடப்பட்டன. புத்தாண்டு தினமான இன்று கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற் கொண்டுள்ளனர்.
கோவை
கோயம்புத்தூரில் 2026 புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் மக்கள் சாலைகளில் கூடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டங்கள் களைகட்டின. குறிப்பாக, ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க் சந்திப்பில் ஏராளமானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாடினர். நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 70 இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. ரேஸ் கோர்ஸ், ஆர்.எஸ். புரம், டி.பி. ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசி ரோடு போன்ற முக்கிய சாலைகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன. அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சில வாகனங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
![]()





