சென்னை, நவ. 6–
சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸின்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், ரேஸ் பைக் ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்றிரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி மேம்பாலத்தில் இருவரும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் சீறிப் பாய்ந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அதனால் இரு வாகனங்களும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் மேம்பாலத்தின் எதிர் திசையில் தலைகவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த குமரன் (வயது 49) என்பவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனங்களில் ஒன்று மோதி, அந்த நபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட சோயல் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக் ரேஸில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் பாகங்கள் உடைந்து பல மீட்டர் தூரம் வரை சாலையில் பரவியிருந்ததோடு, சாலையில் இருபுறமும் ரத்தம் ஆறாக ஓடியது போன்ற காட்சிகள் காண்போர் மனதை பதறச்செய்தது.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நள்ளிரவில் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
![]()





