முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரு கண்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
நான் நன்றாக இருக்கிறேன்! நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்னால், காலையில் வாக்கிங் சென்றபோது, லேசாக தலைசுற்றல் இருந்தது. மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர்கள் சில பரிசோதனைகள் செய்ய அங்கே அட்மிட்டாக சொன்னார்கள்.
மருத்துவமனையில் இருந்தபோதும், அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டு தான் இருந்தேன். சில அவசர கோப்புக்களை கவனித்ததோடு, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் எப்படி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர்கள் – பொதுமக்கள் என்று காணொலி வாயிலாக விசாரித்தேன்.
தூத்துக்குடிக்கு வந்த பிரதமரிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் தயார் செய்து அனுப்பி வைத்தேன். ஏனென்றால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும், மக்கள் பணியாற்ற வேண்டும்! இதுதான் என்னுடைய விருப்பம்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசுகின்ற முதல் நிகழ்ச்சி இது. நாட்டு மக்களுடைய நலன் காக்கும் நிகழ்ச்சி! நாட்டு மக்களுடைய நலன்தான், என்னுடைய நலன்.
கொரோனா காலத்தில், லாக்டவுனில் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு தவணையாக நான்காயிரம் ரூபாய் வழங்கினோம். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி, இதுதான் மக்களைக் காக்கும் உண்மையான அரசு என்று நிரூபித்தோம்.
கல்வி – மருத்துவம் 2 கண்கள்
அதுமட்டுமல்ல, கல்வியும் – மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, கல்விக்காகவும், அதே அளவுக்கு மருத்துவத்திற்காகவும் ஏராளமான திட்டங்களை செய்ய தொடங்கினோம்.
மக்களைத் தேடி மருத்துவம் – இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48, – பாதம் பாதுகாப்போம் -இதயம் காப்போம், – சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம், – மக்களைத் தேடி ஆய்வக சேவைகள், – நடப்போம் -நலம் பெறுவோம் திட்டம், வணிகர்களை தேடி மருத்துவ திட்டம் – தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், – முதல்வர் மருந்தகம் என்று இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது.
1256 முகாம்கள்
இன்றைக்கு தொடங்கியிருக்கின்ற இந்த திட்டத்தில், தொடர்ந்து ஆயிரத்து 256 முகாம்கள் நடைபெறப் போகிறது. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கின்ற ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
ஒவ்வொரு முகாம்களிலும், மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். 17 தனித்துவமான மருத்துவ சேவைகள் இந்த முகாம்களில் இருக்கும். சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையவர்கள், இருதய நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக – பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இந்த முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
முகாம்களில், அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்கள் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்பட இருக்கிறது.
எக்கோ, ஸ்கேன்
பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, இ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட இருக்கிறது.
இந்த முகாமின் சிறப்பம்சம் என்று நான் சொல்வது, உங்கள் டெஸ்ட் ரிப்போர்ட் அனைத்தும் மொத்தமாக பைல் செய்து உங்களிடம் வழங்கிவிடுவோம். இந்த ரிப்போர்ட், உங்களுடைய ‘மெடிக்கல் ஹிஸ்டரி’ போன்றது! எதிர்காலத்தில், நீங்கள் எந்த ட்ரீட்மெண்ட்டிற்கு சென்றாலும், எந்த ஹாஸ்பிட்டலுக்கு சென்றாலும், இந்த ரிப்போர்ட் உங்களுக்குப் பயன்படும்!
இந்த முகாம்கள் மூலமாக, இதில் பயனடைகின்ற எல்லோருடைய நலனும் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை நான் அளிக்கின்றேன். நம்முடைய அரசின் குறிக்கோள், நகர்ப்புறத்தில், நன்றாக படித்து, வசதியானவர்களுக்கு கிடைக்கின்ற மருத்துவ சேவை – கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை எளிய பாமர மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதை உறுதி செய்வோம்.
அனைவருக்கும்
மருத்துவ சேவை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதி கிராமப்புறங்கள் வரை பரவலாகிவிட்டது. மருத்துவமனைகளை நோக்கி வர முடியாதவர்களுக்கும் மருத்துவச் சேவைகளை கொண்டு போகவேண்டும் என்பதுதான் இதுபோன்ற முகாம்களை நாம் நடத்துகின்றோம். இதை மக்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். அப்படி நம்முடைய உடல்நலம் நன்றாக இருந்தால்தான் நம்மால் மகிழ்ச்சியாக வாழமுடியும் – உழைக்க முடியும் – சாதிக்க முடியும்.
மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்னால், திராவிட இயக்கத்தின் ஆசிரியர் அய்யா, எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்று அழைக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்! ஏனென்றால், எல்லோருக்கும் உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை இருக்கும்; அதற்காக அவர்களை நோயாளி என்று சொல்லக்கூடாது!
மருத்துவர்களையும் – மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்கள் “மருத்துவப் பயனாளிகளாக” நாம் பார்க்க வேண்டும்! இந்த முகாம்களுக்கு வருகின்ற மக்களையும், மருத்துவப் பயனாளிகளாகதான் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த முகாம்களுக்கு வருகின்றவர்களை அக்கறையுடன் பரிவுடன் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தான் நம்பர் 1
நீங்கள் ஏற்படுத்துகின்ற விழிப்புணர்வால், ஒருவருடைய உயிர் காப்பாற்றப்படலாம். ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம். எனவே, இதில் உங்களுடைய பங்களிப்பும் மிகவும் அவசியம். எதிலும், எப்போதும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்.
அப்படி, மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், மக்களுடைய உடல்நலனைப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும். இதுபோன்ற திட்டங்களால் அது நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் வேலு, இந்து ராம் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பத்மஸ்ரீ சேஷய்யா, சுரேந்திரன் உள்ளிட்ட நலம் காக்கும் மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





