நடைப் பயிற்சிக்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த அந்தப் பூங்கா. அன்று, விழாக் கோலம் பூண்டிருந்தது.
கண்ணைக் கவரும் வகையில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன, வண்ண வண்ண விளக்குகள். காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தன காகிதத் தோரணங்கள். நம்ம ஊருத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், மக்கள்.
” இன்னைக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கப் போகுது “
” மானாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி, கர்ண மகராசா கதை இப்படி எல்லா கிராமக் கூத்துகளும் இருக்கு” ” அப்படியா?
“ஆமா ” “, இன்னைக்கு அத்தனையும் பாத்துட்டுப் போயிர வேண்டியது தான்” என்று மக்கள் எல்லாம் அந்தப் பூங்கவில் குழுமியிருந்தார்கள்.
வட்ட நிலா கூடக் கிட்ட வந்து பார்க்கும் அளவிற்கு முழு உருவத்தையும் பரப்பி வைப்பது போல முழு பௌர்ணமி நிலா பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது, வானத்தில். தூங்கி விடக்கூடாதென்று விண்மீன்கள் கூட மினுக் …. மினுக்.. என்று கண்கொட்டாமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
தாரை தப்பட்டை, கொட்டுமேள உறுமி என்று ஒரு பக்கம் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தின்பண்டங்கள் ஐஸ்கிரீம்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் குரல்களில் பாடிக்கொண்டிருந்தார்கள். திரும்பிய திசையெல்லாம் அந்தப் பூங்காவில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
” வருசத்துல ஒரு முறை இந்த மாதிரி திருவிழாக்களப் பாக்கிறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு”
” இந்த மாதிரிக் கலைகள் எல்லாம் இப்ப எங்க இருக்கு? எல்லாம் அழிஞ்சிட்டு வருது. கிரிக்கெட், செஸ் கேரம் போர்டு, இப்படி மனுஷன் புதுவிதமான விளையாட்டுகளுக்குப் போயிட்டான். கிராமத்து விளையாட்டெல்லாம் இப்ப அடியோடஅழிஞ்சு போச்சு”
என்று வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் மக்கள் .
” அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கர்ணன் நாடகம் அரங்கேறும் “
என்று அங்கிருந்த ஒலிபெருக்கியில் யாரோ ஒருவர் சொல்ல,
” கர்ணன் நாடகமா? ரொம்ப நல்லா இருக்கும். இதப் பாத்துட்டுத் தான் போகணும் .உண்மையாலுமே மகாபாரதத்தில் இருக்கிற கர்ணன், நடிகர் சிவாஜி படத்தப் பார்த்த பிறகு தான் மகாபாரதமே நமக்கு நல்லா புரிஞ்சுச்சு” என்று சிரித்துக் கொண்டே சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கர்ணன் வேஷத்தில், அசல் கர்ணனாகவே அப்படியே வந்து நின்றார், பரந்தாமன் .உடல் முழுவதும் சுமக்க முடியாத நகை நட்டுகளைப் போட்டு வந்தவரை, திசைக்கொன்றாய்த் திரும்பி நின்றவர்கள் எல்லாம் கர்ணன் நிற்கும் திசை நோக்கித் திரும்பினார்கள்.
“கர்ணன், கதை போடுறாங்களாம். அவருடைய பிறப்பு மகாபாரதத்தில் தப்பா சொல்லப்பட்டிருந்தாலும், அவருடைய குணம் ரொம்ப நல்ல குணம். இருக்கிறதெல்லாம் வாரி வாரி கொடுக்கிற வள்ளல். கடைசில தான் உயிரையே கொடுத்துட்டு போனாரே ? இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் இனிமேல் படைக்குறது கஷ்டம். மகாபாரதத்தில் உயிரோடு இருக்கிற இன்னும் பேசப்படுற கதைகள்ல ஒண்ணு எதுன்னா, அது இந்தக் கர்ணன் கதாபாத்திரம் தான் ” என்று நாடகம் தொடங்குவதற்கு முன்பாகவே கர்ணனைப் பற்றிப் புட்டு புட்டு வைத்தார்கள் பார்வையாளர்கள் .
“கர்ணனைப் பத்தின எல்லாம் விசயத்தையும் சொல்லிட்டீங்க. இனி எதுக்கு நாடகம் பார்த்துகிட்டு, நீங்க சொல்லாத செய்தியவா சொல்லப் போறாங்க. வாங்க போகலாம்” என்று ஒரு கூட்டம் எழும்ப,
“அது எப்படிங்க, இசைஞானி இளையராஜா பாட்ட நாம பாடினாலும், கேட்டாலும் அவர் நேரடியாக கச்சேரி வச்சுப் பாடும்போது பாத்தா எப்படி இருக்கும்? அது மாதிரி தாங்க இந்தக் கர்ணன் கதை கூட .நம்ம என்னதான் மகாபாரதத்த படிச்சாலும் ,நேர்ல அவங்க நடிச்சுக் காட்டும்போது அவ்வளவு நல்லா இருக்கும் .இருந்து பாத்திட்டுத் தான் போலாமே? ” என்று சிலர் சொல்ல, மேடை ஏறிய பரந்தாமன், கர்ணன் வேஷத்தில் கலக்கிக் கொண்டிருந்தார்.
“சூரியனுக்கும் குந்திக்கும் பிறந்தவன் தான் கர்ணன். பிறந்ததும் கர்ணனை ஆத்தில விட்டுட்டார், குந்தி. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ராதா என்பவள் எடுத்து வளர்த்தால் கர்ணனை ராதேயன் என்று அழைக்கப்பட்டார் .வில் வித்தையில் அர்ஜுனனுக்கு இணையானவர்ன்னு கிருஷ்ணரும் பீஷ்மரும் புகழ்ந்திருக்காங்க. மகாபாரதப் போரில் கௌரவர்கள் பக்கம் கர்ணன் நின்னு போர் செய்யும் போது தன் கவசக் குண்டலத்தை இந்திரனால் இழந்தார், அதையும் மீறி சண்டை போட்டு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டாருன்னு கர்ணனப் பத்திய வர்ணனைகள் ஒருவர் பேசப் பேச கர்ணன் வடிவத்தில் இருந்த பரந்தாமன் நடித்துக் காட்டிக் கொண்டே இருந்தார் :அவர் பிறப்பு முதல் இறப்பு வரை ,வீரத்தையும் கொடைத்தன்மையும் வெல்ல இந்த உலகத்தில் யாருமே இல்லை, தன் கையில் இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்த வள்ளல் கடைசியில் தன் உயிரையும் கொடுத்து விட்டார்
என்று பின்புலத்தில் கர்ணனைப் பற்றிய வரலாறைச் சொல்லச் சொல்ல பரந்தாமன் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருந்தார். பார்வையாளர்கள் எல்லாம் பரந்தாமனின் நடிப்பைப் பார்த்துக் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
” உண்மையாலுமே கர்ணன் வந்தா கூட இந்த மாதிரி இருக்காது போல. அவ்வளவு தத்ரூபமா கர்ணன் மாதிரியே பரந்தாமன் இருக்கிறார்” என்று ஊர் மக்கள் மெச்சி பேசினார்கள்.
” வீட்டுக்குப் போகவும் அப்பாவுக்குச் சுத்திப் போடணும். ஊர் கண்ணு பூரா பட்டுருச்சு”
என்று பரந்தாமனின் மனைவி சௌடம்மாள் , அங்கிருந்த தன் உறவினர்களிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
” ஆமா தாயி அள்ளிக் கொடுக்கிறதுலையும் மத்தவங்களுக்கு வீரத்தை சொல்லி அடிக்கிறதுலையும் கர்ணன் மாதிரி யாரும் இல்லை. அதை உன் புருஷன் அப்படியே செஞ்சு காட்டிட்டு இருக்காரு. வீட்டுக்கு போனதும் சுத்திப் போடு. “
என்று கர்ணன் கதாபாத்திரத்தை விட்டு விட்டுப் பரந்தாமனைப் பேச ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக நம்ம ஊர்த் திருவிழா கர்ணன் கதாபாத்திரத்தோடு முடிவடைந்தது. கம்பீரமும் அள்ளிக் கொடுத்த ஆணவச் செருக்கும் நிறைந்த கர்ணன் வேஷத்தில் இருந்த பரந்தாமன்மேடையை விட்டுக் கீழே இறங்கினார் .இறங்கியதுதான் தாமதம், கர்ணன் உடையிலிருந்த பரந்தாமனைக் பசக்கென்று பிடித்தான் அடைக்கலம்.
” என்ன இன்னைக்கு பணம் தருவியா? இல்ல, இன்னைக்கும் ஏமாத்திருவியா ? “
என்று அதிகாரத் தொனியில் அடைக்கலம் கேட்க
“ஐயா இன்னும் கொஞ்ச நேரத்துல தந்துடறேன்”
என்று மேடையில் இருக்கும் போது கம்பீரமாக நின்று கொண்டிருந்த கர்ணன் கீழே வரவும் அடைக்கலத்தின் அங்குசப் பிடியில் சிக்கிய யானையைப் போல பம்மிப் பம்மிப் பேசினார் ,பரந்தாமன்.
” ஐயையோ, இந்த எடுபட்ட பயலுக்கு நாம இங்க இருக்கிறது எப்படி தெரிஞ்சிச்சின்னு தெரியலயே ? இங்கேயும் வந்துட்டானே ? “
என்று அழுது புலம்பினாள், சௌடம்மாள்.
” என்ன செளடம்மா என்னப் பாத்ததும் சவுண்ட் இல்லாம இருக்குற? “
“நீங்க இங்க வருவீங்கன்னு எங்களுக்கு தெரியாது? என்று எச்சிலை விழுங்கினாள், சௌடம்மாள்.
” நீ எங்க தும்மினாலும் எனக்குத் தெரியும்”
என்று ஆணவச் சிரிப்பு சிரித்த அடைக்கலம், அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
“நம்ம ஊருத் திருவிழாக்கு நடிக்க வந்த ஆளுக எல்லாம் இப்படி வாங்க “
என்று அந்தத் திருவிழாவை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தாமோதரன் கூப்பிட,
“ஐயா நான் இங்க இருக்கேன்..
“ஐயா நான் இங்க இருக்கேன்”
என்று அத்தனை பேரும் தாமோதரன் கூப்பிடும் திசையை நோக்கி ஓடினார்கள் .
” இந்தாங்க உங்களுக்கு ஆயிரம். உங்களுக்கு ரெண்டாயிரம்.. உங்களுக்கு ஆயிரம். உங்களுக்கு ஆயிரம் “
என்று நடித்தவர்களுக்கெல்லாம் பணத்தைப் பட்டுவாடா செய்து, கொண்டிருந்தார், தாமோதரன்.
” ஐயா, கர்ணன் வேஷம் போட்ட பரந்தாமன் வந்திருக்கிறார் அவருக்கு எவ்வளவு சம்பளம்? “
” அவருக்கு ரெண்டாயிரம் கொடுத்து விடுங்க”
என்று அள்ளிக் கொடுக்கும் கர்ணனுக்கு இரண்டாயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்தார்கள் .
நம்ம ஊருத் திருவிழாவில் கிடைத்த சம்பளப் பட்டியலில் கையெழுத்து போட்டு அந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி எண்ணுவதற்குள், பட்டென்று அந்தப் பணத்தைப் பிடுங்கினான், அடைக்கலம்.
” என்ன ரெண்டாயிரம் ரூபாய் தானா? இது வட்டிக்குக் கூடப் பத்தாத போல ? மிச்சப் பணத்த எப்ப தருவ ? “
என்று நாக்கைத் துருத்தி அரட்டினான், தாமோதரன்.
” ஐயா ,நம்ம ஊருத் திருவிழா இன்னும் ஒரு மாசத்துக்கு ஊரச் சுத்திச் சுத்தி நடக்கும். எல்லா மேடைகளிலும் எனக்கு அள்ளிக் கொடுக்கிற கர்ணன் வேஷம் தான். நீங்க ஒவ்வொரு இடத்துக்கும் வாங்க .எனக்குத் தருகிற எல்லா சம்பளத்தையும் வாங்கிட்டு போங்க. நான் வாங்கின கடன அடைக்க முடியாட்டியும் வட்டியாவது குறையுமில்ல ஐயா. நீங்க இப்படி கிடுக்குப் பிடி போட்டுக் கேட்டா நான் தற்கொலை பண்றதத் தவிர வேற வழியில்ல. இப்போதைக்கு இந்த வட்டிப் பணத்தை வாங்கிக்கங்க. மிச்ச அசல் பணத்த நான் கொஞ்சங் கொஞ்சமா உங்களுக்கு கட்டிடுறேன் .வீட்டுக்கு வந்து வெளியே நின்னு அசிங்கமா பேசாதீங்க .நீங்க பேசுற பேச்ச கேட்டா நாக்கப் பிடுங்கிட்டுச் சாகிறது மாதிரி ரோசம் வருது இருந்தாலும் வாழணுமே .ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா. இப்போதைக்கு இந்த ரெண்டாயிரம் ரூபாய வச்சுக்கங்க அடுத்த மேடைக்கு வாங்க “
என்று பரந்தாமன் சொல்ல,
” அந்தப் பயம் இருக்கணும். சரி நான் அப்புறமா வாரேன் “
என்று அந்த இரண்டாயிரம் ரூபாயை எச்சில் தொட்டுத் தொட்டு எண்ணிக் கொண்டே சென்றான், தாமோதரன்.
கர்ணன் வேஷத்தைக் கலைக்காத பரந்தாமன், கண்களில் பெருகியது, கண்ணீர்.
கர்ணன் கதை நாளையும் நடக்கப் போகிறது, நம்ம ஊருத் திருவிழாவில், அவசியம் எல்லோரும் வந்து பாருங்க’ என்ற அறிவிப்பு அந்தப் பூங்காவில் ஒலித்தது.
![]()





