செய்திகள்

நத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் பலி: 8 மாணவர்கள் காயம்

Makkal Kural Official

திண்டுக்கல், அக். 31–

நத்தம் அருகே ஆட்டோ மீது அரசுப் பஸ் மோதியதில் பெண் பலியானார். 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 8 பேர் திண்டுக்கல்லில் பள்ளியில் நடைபெறும் கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதற்காக சமுத்திரப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி ஆட்டோவில் வந்துள்ளனர். அந்த ஆட்டோவில் 8 மாணவர்கள் உள்பட 11 பேர் பயணம் செய்தனர். ஆட்டோவை பூதகுடியைச் சேர்ந்த சந்திரன் (53) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

ஆட்டோ நத்தம் அம்மன் குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து திடீரென ஆட்டோவின் பக்கவாட்டில் பலமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த சமுத்திராபட்டியைச் சேர்ந்த திவ்ய ஸ்ரீ (17), குகன் (14), சாருமதி (15), மவுனிகா (16), ஹரிணி ஸ்ரீ (15), ரியாராஜ் (13), சம்பைபட்டியை சேர்ந்த பூமிகா (16), சுண்டக்காபட்டியை சேர்ந்த கோகிலா (17) மற்றும் திருப்பதி, சாகுல்ஹமீது, ஆட்டோ ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், பலத்த காயமடைந்த மேலூர் அந்த ஆட்டோவில் பயணம் செய்த சின்ன கற்பூரம்பட்டியைச் சேர்ந்த நல்லியப்பன் மனைவி நைனம்மாள் (43) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்த திவ்ய ஸ்ரீ, குகன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்த ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *