சிறுகதை விழாக்கள்

நடுகல் விழா…! விழா 22…….. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

டகு…. டகு… டொம்.. டொம்..டகு…. டகு… டொம்.. டொம்.. என்ற உடுக்கைச் சத்தம் அந்தப் பகுதியைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. தன் வலது கையில் உடுக்கையைப் பிடித்து, ஈ…. ஈ… ….ஈ… என்று கரை விழுந்த தன் பற்களை நறநறவெனக் கடித்தபடியே ஒரு விதமான கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உடுக்கையை அடித்துக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர்.

அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்களுக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. இன்னதென்று சொல்ல முடியாத சோகத்தில் தன் இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டபடியே நின்று கொண்டிருந்தாள், அபிராமி, அவளைச் சுற்றி நின்றிருந்தனர், அவளின் உறவினர்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீர் பரப்பிக் கொண்டிருக்கும் வெட்டவெளி வனாரந்தப் பகுதியில் இருந்த நடுகல்லுக்குத் நெய் தீபத் தூபம் ஏற்றி, மயிலிறகால் நடுகல்லை நீவி விட்டுக் கொண்டிருந்தாள், அபிராமி. நடுகல்லைச் சுற்றிக் கற்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள்.

எரிந்த நெய் தீபத்திலிருந்து ஒரு விதமான சுகந்தம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது. சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த அபிராமி திடீரென ஊ…. ஊ… என்று சத்தமிட்டு அழுதாள்.

” சரி… சரி… நடந்தது நடந்து போச்சு… கவலப்படாதே அபிராமி. இனி கவலப்பட்டோ? அழுது புலம்பியோ எதுவும் ஆகப் போறதில்ல” என்று அபிராமியைத் தேற்றினார்கள், அவளைச் சுற்றி நின்றிருந்த உறவினர்கள். அவர்கள் எவ்வளவு சொல்லியும் அபிராமிக்கு அந்த அழுகை அடங்கியபாடில்லை. தேம்பித் தேம்பி அழும் அவளை எவ்வளவு சொல்லியும் அவள் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டே இருந்தது.

“அபிராமி.. அபிராமி … அபிராமி… என்னம்மா இவ்வளவு சொல்றோம். எதுவும் கேக்காம இப்படி அழுதிட்டு இருந்தா நாங்க என்ன செய்யுறது? ” என்று உறவினர்கள் அத்தனை பேரும் சொன்னாலும் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை.

” இறந்து எவ்வளவு வருசமாச்சு. ஆனா, இன்னும் இந்தப் பொண்ணு மனசில அவங்க மூதாதையர்கள் எவ்வளவு ஆழமா பதிஞ்சு இருக்காங்கன்னு பாருங்க. இந்தப் பொண்ணு தாங்க வீரத் தமிழச்சி “

என்று நடுகல் விழாவிற்கு வந்திருந்த ஒருவர் சொல்ல

” ஆமாங்க… நேத்து இறந்து போனது மாதிரியே இந்தப் பொண்ணு அழுகிறதப் பாத்தா நமக்கே அழுகை வந்திரும் போல ” என்று அங்கு வந்த சில ஆட்கள் பேசிக் கொண்டார்கள்.

” இந்த நடுகல் வழிபாடு காலங்காலமா வழிவழியா வந்திட்டே இருக்கு. கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் நடுகல் வச்சு வழிபட்டதா வரலாறு இருக்கு. இந்த நடுகல் யாருக்கு வச்சிருக்காங்க ? “

என்று அந்த நடுகல் விழாவிற்கு புதிதாக வந்த ஒருவர் கேட்க.

” யாராவது போர்ல இறந்து போனவங்களா இருக்கும். அவங்களுக்கு தான் இந்த நடுகல் வச்சு வணங்குவாங்க ” என்று வரலாற்றுப் பூர்வமாய் ஒருவர் உண்மையைச் சொல்ல,

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்

” இந்த நடுகல் விழா யாருக்குன்னு நெனச்சிட்டு இருக்கீங்க? ” என்று விழாவிற்கு வந்த ஒரு பெண் எல்லாேரிடமும் கேட்க ” யாரோ ஒரு வீரருக்கு எடுக்கிற விழா தானே ?”

” இல்ல” ” அப்புறம்? “

“நீங்க நெனைச்சிட்டு இருக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லங்க. இந்த நடுகல் விழாவே வேற “

என்று அந்தப் பெண் பூடகம் போட்டாள்.

” அப்படி என்னங்க ? இந்த நடுகல் விழாவில இருக்கு?” என்று விவரம் தெரியாத சிலர் கேட்ட போது, அபிராமியே வாய் திறந்தாள்.

” நீங்க எல்லாம் நினைச்சிட்டு இருக்கிற மாதிரி, இந்த நடுகல்லுல இருக்கிறது எங்க முப்பாட்டனோ? மூதாதையரோ ? இல்ல. இந்த நடுகல்லுல ஒரு ரகசியம் ஒளிஞ்சிருக்கு : அந்த ரகசியம் தான் எங்களக் கொல நடுங்க வச்சது. அத நெனச்சாலே எங்க ஊன் உடம்பெல்லாம் பதறுது “

என்று அபிராமி சொன்ன போது,

” சரி.. சரி… விடு… அபிராமி… நடந்தது நடந்து போச்சு… இனி அது பத்திப் பேசி எந்தப் பிரயோசனும் இல்ல. ” என்று அபிராமியை ஆதரவாகப் பிடித்தாள், ஒரு பெண்.

” நடந்தது … நடந்து பாேச்சு … விடு விடுன்னு சொல்றாங்களே தவிர, என்ன நடந்தது? ஏது நடந்தது? அப்படின்னு ஒரு ஆளும் சொல்ல மாட்டேங்கிறாங்களே? “

என்று வருத்தப்பட்டவரிடம், அருகில் வந்த ஒருவர் ” சார், ஏன் இந்த நடுகல்ல இப்பப் போயி இப்பிடிக் கும்பிட்டுட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு ஒரே குழப்பா இருக்குல்ல”

” ஆமாங்க “

” ம்…. அது தெரியாமத் தான், இங்க நிறையப் பேரு , புலம்பிக்கிட்டுத் திரியுறாங்க. உண்மையிலயே இந்த நடுகல்ல ஏன் வச்சாங்க. எதுக்காக வச்சாங்கன்னு எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா, அந்த நடுகல்ல தடுக்கி விழுந்து, அபிராமி புருசன் செத்துப் போனது தான் எங்களுக்குத் தெரியும்”

என்று அவர் சொன்ன போது,

” என்னது? இந்த நடுகல்லுல தடுக்கி விழுந்து, ஒரு ஆள் செத்துப் போயிட்டாரா? என்னது ? இதக் கேக்கவே ஒரு மாதிரி இருக்கு? ” என்று அந்த நடுகல்லைப் பார்த்துப் பயந்து போனவர்,

” ஏற்கனவே ஒரு உசுரு போயி தான் அது நினைவா நடுகல் வச்சிருக்காங்க. அப்படின்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, இந்த நடுகல்லுல தடுக்கி விழுந்து இன்னொருத்தரும் இறந்திருக்காரா? இது நடுகல்லா? இல்ல கொலைக் கல்லா? ஐயய்யோ, இந்தக் கல்லப் பாத்தாலே பயமா இருக்கே ? இந்தக் கல்லப்பாத்துப் பாத்துத் தான் நடந்து போகணும் போல “

என்று அபிராமியின் கணவர், அந்த நடுகல்லில் தடுக்கி விழுந்து இறந்தது தெரியாத ஆட்கள் நடுகல்லைப் பார்த்துப் பயந்து நடுங்கினர்.

” இந்த நடுகல்லை, எந்த வீரர் இறந்ததற்கு வைத்தார்கள்? அதில் எந்த வீரரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது? என்று யாருக்கும் எதுவும் தெரியாது. இப்போதைக்கு இந்த நடுகல்லில் தடுக்கி விழுந்து இறந்து போனது,

சிலப்பதிகாரக் கண்ணகிக்கு நடுகல் வைத்து வணங்கிய சேரன் இல்லை. தற்போது கணவனை இழந்து அழுது கொண்டிருக்கும் அபிராமியின் கணவன் சேரன் என்பது மட்டுமே எல்லாேருக்கும் தெரிந்தது.

அன்று, வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது, நடுகல்லில் தடுக்கி விழுந்து இறந்த அபிராமியின் கணவர் சேரனின் நடுகல் விழா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *