சென்னை, நவ. 10–
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷ் உடன் நடித்த அபினய் (வயது 44) இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இதையடுத்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மெலிந்த நிலையில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்த அபிநய், தான் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதாகவும் உதவி கோரி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதையடுத்து சிலர் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக கேபிஒய் பாலா, சின்னத்திரை (குக் வித் கோமாளி புகழ்) அபிநய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, அவருக்கு தன்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் ரூபாய்யை மருத்துவ செலவுக்காக கொடுத்திருந்தார். ரூ.5 லட்சம் வழங்கினார்.
இறுதிச் சடங்குக்கு
உறவினர் இல்லை…
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் அபிநய் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட உறவினர்கள் யாரும் இல்லையாம். அபிநய்யின் மரணம் குறித்து அறிந்ததும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
![]()





