செய்திகள்

‘நடப்புக் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து’: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

Makkal Kural Official

8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என தகவல்

சென்னை, ஆக. 8–

மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாநில கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை. இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே திட்டம். வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம். மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றாற்போல் வருடந்தோறும் மாற்றப்படும்.

இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம். 500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக கொண்டு வர உள்ளோம். AI, Robotics போன்ற பாடத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்களும் எதிர்காலத்தில் எந்த கல்லூரியில் எந்த நிலை அடைய வேண்டும் என நினைக்கும் வகையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு படிக்கும்போதே மாணவ–மாணவிகள் ‘கேரியர்’ வழிகாட்டி பெற்று எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும். இனி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். நடப்பு கல்வியாண்டு முதலே 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 11ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

நீதிபதி முருகேசன் தலைமையில்

14 பேர் குழு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என சிறப்பான கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிா்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசிடம் 2023ல் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் மாணவர் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *