செய்திகள்

த.வெ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

Makkal Kural Official

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகரான சேகர் என்பவர் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் ஏழு நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டு மாமல்லபுரம் தனியார் நட்சத்திர விடுதிக்கு இன்று காலை வந்து சேர்ந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்று கௌரவித்தார்.

விழாவில் விஜய் பேசியதாவது:

அன்பும் கருணையும்தான் அனைத்துக்கும் அடிப்படை. இவை இரண்டும் இருப்பதுதான் தாய் மனது. நமது தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட தாய் அன்பு கொண்ட மண். தாய்க்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்றுதான். பொங்கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையையும் பகிர்ந்து கொள்வதுதான் நமது ஊர். வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான்.

நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உள்ளது என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லிக் கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் போதும் அனைத்து பிரச்னையையும் வென்றுவிடலாம். நம்பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் உள்ளன. அவற்றில் ஒன்று, ஒரு இளைஞருக்கு எதிராக அவரது சகோதரர்கள் அவரை கிணற்றில் தள்ளுகிறார்கள். அதிலிருந்து மீண்ட இளைஞர் நாட்டுக்கே அரசராகி, துரோகம் செய்த சகோதரர் மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றுகிறார். இந்த கதையை யாரை குறிக்கிறது என்பது நான் சொல்லத் தேவையில்லை.

ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது. அதற்காகதான் நமது கொள்கைக்கு மதசார்பற்ற கொள்கை எனப் பெயர் வைக்கப்பட்டது.கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவரும் உறுதியாக இருங்கள், வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *