செய்திகள்

தை அமாவாசை: புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

Makkal Kural Official

சென்னை, ஜன. 18–

தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும் என்பது ஐதீகம். தை மாதத்தில் வரும் இந்த அமாவாசையில் கங்கையில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும் சிறப்பு.

அந்த வகையில் தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேதாரண்யம், ஸ்ரீரங்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீராடி, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 12 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம்

இதே போல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். மாம்பழச்சாலை முதல் ஸ்ரீரங்கம் வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் பவானி கூடுதுறை, நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரை, திருவையாறு, பூம்புகார் போன்ற இடங்களிலும் பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களின் குளக்கரையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *