சென்னை, டிச.18:
நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.
ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார்.
ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், தமது ஆட்சிக் காலத்தில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் காட்டினார்.
இந்நிலையில், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று (17–ந் தேதி), அ.தி.மு.க. ஆட்சியில் மடிக்கணினி பெற்று, அதன் வாயிலாக தங்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டமைத்து, இன்றைக்கு பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் இளைஞர்களை நேரிலும், காணொலி வாயிலாகவும் சந்தித்து உரையாற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்கள் பெருமிதம்
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர்கள், அம்மாவின் அரசு அளித்திட்ட விலையில்லா மடிக்கணினி, தங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் நெகிழ்வுடன் பகிர்ந்ததோடு, இன்றளவும் தங்களிடம் அம்மா மடிக்கணினி இருப்பதை பெருமிதத்தோடு நினைவுகூர்ந்து காண்பித்து, தங்களின் வெற்றிக்கு அம்மாவின் அரசு அளித்த மடிக்கணினி துணை நின்றது பெருமிதம் அளிப்பதாகக் கூறினார்கள்.
நேற்று எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின் வெற்றிகளைக் கேட்டறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மாணாக்கர்கள், இன்றைய திமுக ஆட்சியில் மடிக்கணினி இதுவரை கிடைக்காததால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக ஏ.ஐ. உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கோலோச்சும் இந்த புதிய உலகத்தில், தங்களுடைய விஞ்ஞான கல்விக்கு அடிப்படையாக விளங்கும் மடிக்கணினி வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக, தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டாலின் நாடகம்
மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் தமிழ்நாட்டை ஆளக் கூடிய ஸ்டாலின் மாடல் திமுக அரசு, அண்ணா தி.மு.க. அரசின் மகத்தான திட்டத்தை நிறுத்தி, மாணாக்கர்களை கடந்த நான்கரை ஆண்டுகளாக வஞ்சித்துவிட்டு, தற்போது தேர்தல் நெருங்குவதால் மடிக்கணினி அளிப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருவதை சுட்டிக்காட்டியதோடு, பெயருக்கு வழங்கும் நோக்கில் தரமற்ற லேப்டாப் வழங்காமல், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களுடன் கூடிய தரமான மடிக்கணினிகளை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
![]()





