தேனி, ஜூலை 2–
தேனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் இறந்தார். அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் மரணங்கள் அடிக்கடி நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகிறது.
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 14.01.2025 அன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டது. இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவல் நமக்கு கிடைத்த போது, இந்த வீடியோ விவகாரம் குறித்து விசாரித்ததில், சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவது மகன் ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த 14.01.2025 அன்று போலீசார் இவரை எதற்காக காவல் நிலையத்தில் வைத்து தாக்கினார்கள் என்ற தகவல் இதுவரை இல்லை.மேலும் இவர் மீது புகார் ஏதும் வரப்படாத நிலையில் இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை,புகார் மற்றும் வழக்கு இல்லாத நிலையில் எதற்காக போலீசார் இவரை சரமாரியாக இழுத்து வந்து தாக்கினார்கள்,பின்னர் ஏன் விடுவித்தார்கள் என்பது தெரியவில்லை.
இளைஞர் ஒருவரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
![]()





