சென்னை, ஜூலை 22–
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ‘பெட் ஸ்கேனிங்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. உடல் உள் உறுப்புகள் மற்றும் திசுக்கள் செயல்பாடு, நோய் பாதிப்பை கண்டறிவதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பரிசோதனை முடிந்த நிலையில், தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் திரும்பினார்.
அப்போது அவர் காரின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காரில் உடனிருந்தனர். அப்பல்லோவில் 3 நாட்கள் டாக்டர்கள் கண்காணிபில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்று காலை முதலமைச்சருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவர்கள் அறிக்கை அளிப்பார்கள். 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதலமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தோழமை கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் குறித்து நலம் விசாரித்தனர். பூரண உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், முதலமைச்சரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்தார்.
தெலுங்கானா முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் சமூகவலைதள பதிவில், ‘தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
![]()





