தஞ்சாவூர், ஜன.27-
நடைபெற உள்ள தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழகத்துக்கும் இடையேதான் போட்டி என்று தஞ்சையில் நடந்த தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சையை அடுத்த செங்கிப் பட்டியில் டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றார்.
மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சர் ஆனதும் போட்ட முதல் கையெழுத்தே பஸ்களில் பெண்களுக்கு கட்டண மில்லா விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். ‘ஸ்டாலின் பஸ்’ என்றே மக்கள் அதற்குப் பெயர் வைத்துவிட்டார்கள். அதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி.
கல்லூரிகளில் படிக்கும் மாணவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயனடைகிறார்கள். பணிக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாக தங்குவதற்கு, தோழி விடுதிகள் திறந்திருக்கிறோம். அடுத்து, இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து திறக்கப்போகிறோம்.
இப்படி, பெண்ணுரிமைக்கான ஆட்சியாக – பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறை வேற்றும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் ஆட்சி இயங்கி வருகிறது. மகளிர் குழுவினரின் பயணம், ஒவ்வொரு பாகத்திலும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 மகளிர் தினம் வரை நடக்கப் போகிறது.
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்று தொகுதிகள் தோறும் பிப்ரவரி 28-ந்தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடக்கப் போகிறது. பிப்ரவரி 7-ந் தேதி விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள்.
பிப்ரவரி 11-ந் தேதி தொடங்கி, பூத் கமிட்டி மாநாடு மண்டல வாரியாக நடக்கப்போகிறது. பிப்ரவரி மாதம் மட்டும் 5 மாநாடு நடத்தப்போகிறோம். மார்ச் 8-ம் நாள், தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், 10 லட்சம் உடன்பிறப்புகள் கூடும், மாநில மாநாட்டைப் நடத்தப்போகிறோம்.
தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, ஏராளமான பொய்களைச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்திய மாநிலங்களிலேயே பெண் களுக்கு பாதுகாப்பான மாநிலம், எங்கள் தமிழ்நாடுதான், அடித்துச் சொல்கிறேன். இங்குதான், அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அண்மையில், அவதார் என்ற குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு – ஆரோக்கியம் – கல்வி முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில், முதல் 25 நகரங்களில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 7 நகரங்கள் இருந்தது. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.
பிரதமர் மோடியே மணிப்பூரை மறந்து விட்டீர்களா? நீங்கள் டபுள் என்ஜின் என்று ஓட்டிய டப்பா என்ஜின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்? ஏற்கனவே, இதே பா.ஜனதா –- அ.தி.மு.க. கூட்டணி, 2019, 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று பார்த்தார்கள். தோற்றுப் போனார்கள். அடுத்து, 2024 தேர்தலில், அ.தி.மு.க.வானது பா.ஜ.க. எனும் வேஸ்ட் லக்கேஜை கழற்றிவிட்டு நிற்கலாம், பிறகு சேர்ந்து கொள்ளலாம் என்று மறைமுகக் கூட்டணியாக வந்தார்கள். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”தான் என்று தமிழ்நாட்டு மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டார்கள்.
பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி, கட்டாயத்தால் உருவாகியிருக்கும் கூட்டணி. அ.தி.மு.க. தொண்டரின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி.
மீண்டும் தங்களின் கண்ணசைவிற்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்துக்கொண்டு, டெல்லியில் இருந்தே தமிழ்நாட்டையும் ஆளலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியைத் தமிழ்நாடு தரும். உங்களை எங்களின் எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்.
நடக்கப்போகும் தேர்தல், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடையாது. தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்தான். தமிழ்நாடு என்றாலே, தமிழ்நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கும், நாடே திரும்பிப் பார்க்கும் திட்டங்களை செயல்படுத்தும், தலைநிமிர்ந்து தன்மானத்தோடு போராடும் தி.மு.க.தான். எனவே, நம்முடைய மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், டிஆர்.பி.ராஜா, கயல்விழி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் ஆ.ராசா, முரசொலி, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
![]()





