பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி
ஐதராபாத், நவ.3–
தெலுங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 3 மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஐதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று அதிகாலை காலை புறப்பட்டது. ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஐதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த கிராவல் மண் பேருந்தின் மீது சரிந்தது. இதில் பல பயணிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களால் தப்பிக்க முடியவில்லை. இந்த விபத்தில் 3 மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் பலியானார்கள். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது.
விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தால் செவெல்லா– விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று தேவையான அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே செவெல்லா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், இந்த விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சிறு காயங்களுடன் உள்ள 6 பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த விபத்து தொடர்பாக தெலுங்கானா அரசு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. செவெல்லா பேருந்து விபத்து குறித்த தகவல்களை அறிய 9912919545 மற்றும் 9440854433 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி
ரூ.2 லட்சம் நிதியுதவி
இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:–
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரன நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிதியுதவி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
![]()





