ஐதராபாத், ஜூலை 1–
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி அருகே உள்ள 3 மாடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை.
தெலுங்கானா மாநிலம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பல மாடி கட்டிடங்கள் இடிபாடு அடைந்து குவியலாக மாறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில் தற்போது வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 43 பேரை காணவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இறந்த 38 பேரில், பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துவிட்டன. இதுவரை 9 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலர் இன்னும் பட்டன்சேரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம். இடிபாடுகள் அகற்றப்பட்டவுடன், எங்களுக்கு ஒரு தெளிவான படம் கிடைக்கும் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அடையாளம் காண டிஎன்ஏ ஆய்வு
உடல்களை டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் அடையாளம் காண தடயவியல் மருத்துவர்களை சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 3 மாடி இடிந்த கட்டிடத்தில் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடி குழுக்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்த ஆலையில் தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தேசிய மீட்பு படைக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 200 வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநில முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த நிலையில், வெடி விபத்துக்கான காரணத்தை விசாரித்து, தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()





