புதுடெல்லி, நவ.3–
தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் 7ம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன. பின்னர் இந்த வழக்கு கடந்த 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் காணொலி மூலம் ஆஜராக அனுமதி கேட்டதையும் கடந்த 31-ந் தேதி நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தெரு நாய்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகி உள்ளார். அவர் ஆவணங்களுடன் கோர்ட்டுக்கு வந்தார்.
மேலும் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருப்பதைக் நீதிபதிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
மேலும், கேரள தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த விலக்குக் கோரும் மனுவை அனுமதித்த நிலையில், மாநில முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
இந்திய விலங்குகள் நல வாரியத்தையும், ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார். வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே, பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று தங்கள் தரப்புப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சிறப்பு நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்துக் கொண்டார்.
இதையடுத்து, பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஒருங்கிணைத்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அனைத்து தலைமைச் செயலர்களும் அடுத்த விசாரணையில் ஆஜராக வேண்டியதில்லை என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியமாகக் கையாண்டதாலேயே, தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பிறப்பிக்கும் உத்தரவுகளை சரியாக கையாளாவிட்டால், மீண்டும் இவர்கள் நேரில் ஆஜராகும் நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியதோடு, 7ம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
![]()





