புதுடெல்லி, நவ.24
3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிறில் ரமபோசாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா–தென் ஆப்பிரிக்கா இடையிலான இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். தென் ஆப்ரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தன. இது நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென் ஆப்ரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென் ஆப்ரிக்கா அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
![]()





