செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி

Makkal Kural Official

சென்னை, ஆக. 15–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தூய்மைப் பணியாளர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக தூய்மைப் பணியாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தூய்மை பணியாளர்களான எங்களுக்கு, எங்கள் நலனுக்காக அரசு அறிவித்த புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்களுக்கு தந்த திட்டங்களால் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. முத்தாய்ப்பாக தனியாக எங்களுக்கென்று நல வாரியத்தை உருவாக்கியதற்கு, காலம் முழுவதும் நன்றி சொல்வோம். இந்த திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் உறுதியுடன், எங்களை மதித்து எங்களுடைய நீண்ட கால கோரிக்கையினை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தங்கள் தலைமையினை மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற துறைகளுக்கும் செய்யப்படுவதைப் போல எங்கள் ஊதியத்தையும் காலத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு, தூய்மை பணியாளர்களை தாய்மை பணியாளர்கள் என போற்றுகின்ற முதலமைச்சர் உறுதி செய்வார் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் நம்புவதைப்போல் பெருநகர மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களும் நம்புகின்றோம் என தெரிவித்தனர்.

மற்ற கோரிக்கைகளையும்

பரசீலிக்க உறுதி

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *