செய்திகள்

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடல் கோவை வந்தது: கலெக்டர் தலைமையில் அஞ்சலி

Makkal Kural Official

கோவை, நவ. 23:

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் சக விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை கலெக்டர் அஞ்சலி செலுத்தினார்.

துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது. இந்தியா உட்பட முன்னணி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் விழுந்து தீப்பற்றியது. இதில் விமானி 37 வயது நமன் சியால் உயிரிழந்தார். இவர் இமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர். விமானி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இவர் சூலூர் விமானப்படை தளத்தில் சியால் கமாண்டராக பணியாற்றி வந்தார். சூலூர் விமானப்படை குடியிருப்பில் சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இவரின் மனைவி அப்சானும் சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டராக உள்ளார். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

வீரமரணம் அடைந்த விங் கமாண்டர் நாமன்ஷ் சாயல் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை கலெக்டர் பவன் குமார், காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விமானப் படை அதிகாரிகள் நாமன்ஷ் சாயல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நாமன்ஷ் சாயலின் உடல் அவரின் சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *