புதுடெல்லி, செப்.9-
நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது, முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 67), எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி (வயது 79) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.
முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், ‘இந்தியா’ கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் நபராக
வாக்களித்த மோடி
வாக்குப்பதிவு நடக்க உள்ள நாடாளுமன்ற முதல் தளத்தில் உள்ள வசுதா அரங்கிற்கு தரைதளத்தில் உள்ள மகர் துவார், ஷ்ரதுல் துவார் வாயில்கள் வழியாக வாக்களிக்க எம்.பி.க்கள் உள்ளே செல்வதற்கு சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிக்க வந்த எம்.பி.க்கள் தங்கள் ‘மொபைல் போன்’களை வாயிலில் சமர்ப்பித்து, ‘டோக்கன்’ பெற்றுக் கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்–101 என்ற அரங்கில் தேர்தல் துவங்கியது. தேர்தலை நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேல்சபை செயலாளர் பி.சி.மோடி வாக்குப்பதிவை கண்காணித்தார். பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10 மணிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், வாக்குப் பதிவு அறைக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.இதற்கு எதிராக, இடப்புறத்தில், ஆறு மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதில் தேர்தல் அலுவலர்கள் அமர்ந்து வாக்களிக்க வரும் எம்.பி.க்களுக்கு உதவி செய்தனர். இந்த இரு வரிசைகளை தாண்டி, வலதுபுறம் 3, இடதுபுறம் 3 என மொத்தம் ஆறு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்குபோய், எம்.பி.க்கள் வாக்குகளை ரகசியமாக பதிவு செய்தனர்.
இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு ஆகியோர் வாக்களித்தனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பா.ஜ.க. எம்.பி கங்கனா ரனாவத் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோரும் வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
ராகுல் காந்தி வாக்களித்தார்
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனர்.
இன்று மாலையே
முடிவுகள் அறிவிப்பு
தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தல் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படுகிறது. கட்சி எம்.பி.க்கள், கொறடாவுக்கு கட்டுப்படாமல் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம். அதாவது போட்டியிடும் வேட்பாளர்களை வாக்காளர்கள் விருப்பத் தேர்வில் 1, 2 என வரிசைப்படி குறிப்பிட வேண்டும். இதில் முதல் விருப்பத்தேர்வை குறிப்பிட வேண்டியது கட்டாயம் ஆகும். விருப்பத்தேர்வை குறிப்பிட தேர்தல் அதிகாரிகள் தனி பேனா வழங்குவார்கள். இந்த பேனாவாலேயே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தில் 4 மேஜைகள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதில், முதல் இருக்கையில் தேர்தல் அதிகாரி 2வது, 3வது இருக்கைகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கான முகவர்களும், 4வது இருக்கையில் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அமர்ந்திருந்தனர்.
யாருக்கு வாய்ப்பு?
தேர்தல் கமிஷன் துணை ஜனாதிபதி தேர்தலை அறிவித்தபோது, நாடாளுமன்ற இரு அவைகளின் மொத்த உறுப்பினர்கள் 788 (மக்களவை 543 மற்றும் மாநிலங்களவை 245) பேரில், மாநிலங்களவையில் 5 இடங்களும், மக்களவையில் ஒரு இடமும் காலியாக இருப்பதாக தெரிவித்தது. இதனால் வாக்களிக்க இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 782 ஆக இருக்கிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜ.க.வின் 339 உறுப்பினர்களுடன் மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. இத்துடன் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் (11 எம்.பி.க்கள் உள்ளனர்) கட்சி உள்ளிட்ட வேறு சில கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள் என கூறப்படுவதால் சுமார் 450 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் சி.பி.ராதாகிருஷணன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள எம்.பி.க்களின் கூட்டுக்கணக்கு ஆம் ஆத்மியை தவிர்த்து 313 ஆக உள்ளது. ஆம் ஆத்மி உறுப்பினர்கள் 12 பேரையும் சேர்த்தாலும் 325தான் ஆகும். இதனால் வெற்றி வாய்ப்பு சுதர்சன் ரெட்டிக்கு குறைவு தான்.
தேர்தல் புறக்கணிப்பு
இது மட்டுமின்றி பிஜூ ஜனதா தளம் மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி ஆகியவற்றின் 11 உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அந்த வாக்குகளும் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
![]()





