புதுடெல்லி, ஆக. 20–
துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்திய நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்த துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5 மணிக்குப் பின், வாக்குகள் எண்ணிக்கை நடக்கும் என தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில் நாளையுடன் (21–ந்தேதி) முடிவடைகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கோவையைச் சேர்ந்த மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மோடி முன்னிலையில்…
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளான நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு நான்கு தொகுப்புகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் 20 முன்மொழிபவர்கள் மற்றும் 20 வழிமொழிபவர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அதில் பிரதமர் மோடியின் பெயரைத் தவிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலன் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹெச்டி குமாரசாமி, அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த தம்பி துரை, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சி, லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மற்றும் அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதமர் வேண்டுகோள்
நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார். தற்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
இந்தியா கூட்டணியின் வேட்பாளரான சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
![]()





