செய்திகள்

துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக.18-

துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனா திபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். பதவிக்காலம் முடிவடையும் முன்னரே அவர் ராஜினாமா செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால் அதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி தேர்தல் கமிஷன் பணிகளை முடுக்கி விட்டது.

குறிப்பாக துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தகுதி வாய்ந்த ‘எலக்ட்டேரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர்களின் தொகுப்பை தேர்தல் கமிஷன் உருவாக்கியது.

அதன்படி நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும், மாநிலங்கள வையின் நியமன உறுப்பினர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியுடை யவர்கள் என அறிவிக்கப்பட்டது.

அதாவது மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 233 பேர் (தற்போது 5 இடங்கள் காலி), நியமன உறுப்பினர்கள் 12 பேர், மக்களவையின் 543 உறுப்பினர்கள் (தற்போது ஒரு இடம் காலி) ஆகியோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என கடந்த 1-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது.

கடந்த 7-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வருகிற 21-ந் தேதி ஆகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால், அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கூட்டணியின் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜனதாவின் ஆட்சிமன்றக்குழு நேற்று டெல்லியில் கூடியது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் தேசியத்தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மராட்டிய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை (வயது 67) தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப்பின் செய்தி யாளர்களை சந்தித்த ஜே.பி.நட்டா, இதை அறிவித்தார். கூட்டணி கட்சிகளை ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என கூறிய ஜே.பி.நட்டா, இது தொடர்பாக எதிர்க்கட்சி களிடம் கடந்த வாரமே பேசியதாகவும், தொடர்ந்து அவர்களது ஆதரவை கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் முன்னிலையில்

வேட்புமனு தாக்கல்

ஆளும் கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பிறகே அது குறித்து முடிவு எடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதாகவும், தற்போது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் தனது 40 ஆண்டு பொதுவாழ்வில் அனைத்துக் கட்சிகள் மற்றும் பிரிவினருடனும் சிறந்த உறவுகளை பேணி வருவதாகவும், இதன் மூலம் அவரை போட்டியின்றி தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் விரைவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார். இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *